ரூ.1.22 லட்சத்தில் கிடைக்கக்கூடிய பைக் மாதிரியா இருக்கு பார்க்க? ஹோண்டாவின் புதிய அறிமுகம்!!
ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எஸ்பி160 (SP160) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்களை பெற்றுள்ள இந்த ஹோண்டா பைக்கின் முக்கியமான அப்டேட் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அது எந்த மாதிரியான அப்டேட் என்பதையும், புதிய ஹோண்டா எஸ்பி160 பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மக்கள் அதிகம் பேரால் வாங்கப்படும் 160சிசி பைக்குகளுள் ஒன்று, ஹோண்டா எஸ்பி160 ஆகும். இதனாலேயே தவறாமல், இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 ஹோண்டா எஸ்பி160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,21,951 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பைக்கின் ஆரம்ப விலை மட்டுமே ஆகும்.

வழக்கம்போல் சிங்கிள்-டிஸ்க் மற்றும் டபுள்-டிஸ்க் என 2 விதமான வேரியண்ட்களில் 2025 எஸ்பி160 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,21,951 என்பது சிங்கிள்-டிஸ்க் வேரியண்ட்டின் விலை ஆகும். டபுள்-டிஸ்க் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,27,956 ஆகும். சிங்கிள்-டிஸ்க் வேரியண்ட்டின் விலை முன்பு இருந்ததை காட்டிலும் ரூ.3,000-மும், டபுள்-டிஸ்க் வேரியண்ட்டின் விலை ரூ.4,605-மும் அதிகம் ஆகும்.
முன்பு இருந்ததை காட்டிலும், 2025 ஹோண்டா எஸ்பி160 பைக்கின் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய எஸ்பி160 பைக்கின் முன்பகுதி முன்பு இருந்ததை காட்டிலும் ஷார்ப் (Sharp)-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஹெட்லைட் (Headlight) பகுதி முன்பை விட வளைவாக மாறியுள்ளது. இவை தவிர்த்து, எஸ்பி160 பைக்கின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
எஸ்பி160 பைக்கிற்கு முன்பு 6 விதமான கலர் ஆப்ஷன்களை ஹோண்டா வழங்கி வந்தது. ஆனால் தற்போது அவை நான்காக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் பிளாக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் என்பன அந்த 4 கலர் ஆப்ஷன்கள் ஆகும். ஹேண்டில்பாருக்கு மத்தியில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்ட 4.2-இன்ச் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் ரோட் சிங்க் (Roadsync) மொபைல் செயலி உடன் இணைக்கக்கூடிய இந்த திரையின் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த எச்சரிக்கைகளையும், பாடல்களையும் பெறலாம். புதிய எஸ்பி160 பைக்கில் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதியை ஹோண்டா வழங்கியுள்ளது. 2025 எஸ்பி160 பைக்கில் கொண்டுவரப்பட்ட முக்கியமான அப்டேட் அதன் என்ஜினில் ஆகும்.
பைக்கின் 162.71சிசி, ஏர்-கூல்டு என்ஜின் ஒபிடி2பி (OBD2B) விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய டார்க் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது என்றாலும், குதிரையாற்றல் 0.2 பிஎச்பி குறைந்துள்ளது. 2025 எஸ்பி160 பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக 13 பிஎச்பி மற்றும் 14.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 2025ஆம் ஆண்டை புதிய எஸ்பி160 பைக் உடன் ஆரம்பிக்க ஹோண்டா தயாராகிவிட்டது. இதனால், இப்போது புக் செய்தால் அடுத்த ஒரு சில வாரங்களிலேயே 2025 ஹோண்டா எஸ்பி160 பைக்கை டெலிவிரி பெற்றுவிடலாம். ஹெட்லைட்டின் டிசைன் மாற்றப்பட்டுள்ளதால், சாலையில் ஓடும்போது பழைய எஸ்பி160 பைக்கில் இருந்து வித்தியாசமான லுக்கை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








