ஓலா மார்க்கெட்ட காலி பண்ண ஒருத்தன் பொறந்துட்டான்.. கார்கள போல ஸ்மார்ட் சாவியுடன் வந்திருக்கு ஹோண்டா ஆக்டிவா இ:
இந்தியர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு விருந்தளிக்கும் விதமாக ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களை நாட்டில் அறிமுகம் செய்து இருக்கின்றது. நிறுவனம் ஒரே ஒரு எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடலை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. ஆக்டிவா இ: (Activa e:) மற்றும் க்யூசி1 (QC1) ஆகிய மாடல்களையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த பதிவில் நாம் ஆக்டிவா இ: ஸ்கூட்டரின் சிறப்புகள் பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பற்றிய தெரிந்துக் கொள்ள டாப் 5 முக்கிய தகவல்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி பேக் விபரம்: ஹோண்டா ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் அதன் பேட்டரி பேக்கும் ஒன்றாகும். இரண்டு பேட்டரி பேக்குகளை பொருத்தும் வகையிலேயே இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 1.5 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளையே இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.
இரண்டையும் தனியாக கழட்டிக் கொள்ள முடியும். ஆகையால், இந்த பேட்டரி பேக்குகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஓர் முழு சார்ஜில் ஹோண்டா ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 102 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
எலெக்ட்ரிக் மோட்டார் விபரம்: இ-ஸ்கூட்டருக்கான எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்விங்-ஆர்ம்மிலேயே பொருத்தப்பட்டு இருக்கும். இது 6 kW மற்றும் 22 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலும், வெறும் 7.3 செகண்டுகளிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும். எனவே அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாக ஆக்டிவா இ: இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
சிறப்பம்சங்கள்: ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதாக மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், 5 அங்குல டிஎஃப்டி வகை திரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இது ஓர் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், ஆக்டிவா இ: மாடலின் உயர் நிலை தேர்வில் 7 அங்குல திரை வழங்கப்பட்டு இருக்கும்.
இதிலேயே மிக அதிக வசதிகள் வழங்கப்பட்டு இருக்கும். குறிப்பாக, செல்போனுக்கு வரும் அழைப்புகளைக் காணும் வசதி, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை அறியும் வசதி என பல்வேறு முக்கிய அம்சங்களை இது கொண்டிருக்கும். ஸ்மார்ட் சாவி வசதியும் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட இருக்கின்றது. இதன் வாயிலாக நவீன கால கார்களை போல இந்த ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
வேரியண்ட், வண்ண தேர்வு மற்றும் ரைடிங் மோட் விபரம்: எஸ்டிடி (STD) மற்றும் ரோடு சிங்க் ட்யூவோ (RoadSync Duo) ஆகிய தேர்வுகளிலேயே ஆக்டிவா இ: விற்பனைக்குக் கிடைக்கும். ரைடிங் மோடை பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஈகோ (Eco), ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகியவையே அவை ஆகும். ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் ஆக்டிவா இ: விற்பனைக்குக் கிடைக்கும். இதில் நீல நிறத்தில் மட்டும் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய நிற தேர்வுகளும் இதில் வழங்கப்படுகின்றன.
சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்-அப் விபரம்: மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 160மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 130மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. வீல்களைப் பொருத்த வரை இரண்டு முனைகளிலும் 12அங்குல வீல்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே அறிவிக்கப்பட இருக்கின்றது. மேலும் ப்ரீ புக்கிங் பணிகள் புத்தாண்டு தினத்தன்று தொடங்கப்பட இருக்கின்றது. இதேபோல், டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த ஸ்கூட்டர் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் அல்லது 1.10 லட்ச ரூபா விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








