நாளை அறிமுகமாகுது ஹோண்டாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா மார்க்கெட்டை காலி பண்ண போகும் தயாரிப்பு!
ஹோண்டா (HMSI) நிறுவனம் இந்தியாவிற்கான முதல் மின்சார இரண்டு சக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. நாளைய (நவம்பர் 27) தினமே அதன் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. இது என்ன மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ஆக்டிவாவின் மின்சார வெர்ஷனையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனத்தின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, நிறுவனம் வெளியிட்ட டீசர் படங்கள், நாளை அறிமுகமாக இருப்பது ஆக்டிவா இவி என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. குறிப்பாக, நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரில் இடம் பெற இருக்கும் ஹெட்லைட் பற்றிய படத்தை வெளியிட்டு இருந்தது.

அது ஹோண்டா ஆக்டிவாவில் இடம் பெற்றிருக்கும் முகப்பு லைட்டைப் போலவே இருந்தது. இதன் அடிப்படையிலேயே நாளை அறிமுகம் செய்யப்பட இருப்பது ஆக்டிவாவின் இவி வெர்ஷனே என மிகவும் ஸ்ட்ராங்காக நம்பப்படுகின்றது. பெங்களூருவில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் வாயிலாகவே இதன் அறிமுக நிகழ்வு அரங்கேற இருக்கின்றது.
மேலும், இந்தியாவிற்கான இந்த முதல் எலெக்ட்ரிக் டூ-வீலரில் பல்வேறு சிறப்பம்சங்களை ஹோண்டா வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சியூவி இ: மாடலில் உள்ள பல்வேறு அம்சங்களை இதில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக இந்த வாகனத்திடம் இருந்து ஸ்வாப்பபிள் பேட்டரி பேக்கை இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் டூ-வீலர் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
தனியாக கழட்டி மாட்டும் திறன் கொண்ட பேட்டரி பேக்கே ஸ்வாப்பபிள் பேட்டரி ஆகும். எனவே பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய வண்டி கூடவே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. பேட்டரியை மட்டும் தனியாக கழட்டி எடுத்துச் சென்றும் சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமில்லைங்க, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 110 சிசி திறன் கொண்ட ஐசிஇ ஸ்கூட்டர்களுக்கு இணையானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 104 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என்றும் நம்பப்படுகின்றது. சமீபத்தில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டு இருந்தது.
இந்த படத்தின் வாயிலாகவே இந்த ரேஞ்ச் திறன் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. விலை குறைவானதாக இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டே இவ்வளவு குறைவான ரேஞ்ச் தரும் பேட்டரி பேக்கை தன்னுடைய இந்தியாவிற்கான முதல் மின்சார ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எஸ்1 சீரிஸ், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இது மட்டுமில்லைங்க, ஃபேமிலிகளுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி என கூறிக் கொண்டு ஏத்தர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் ரிஸ்தா-விற்கும் இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா உள்ளிட்ட மேலே பார்த்த நிறுவனங்கள் அனைவருக்கும் போட்டி அளிக்கும் விதமாக விரைவில் சுஸுகி நிறுவனம் அதன் அக்செஸ் ஸ்கூட்டரின் மின்சார வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய வாகனங்களை அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால், விரைவில் இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் மிகுந்த போட்டியான சூழல் காணப்படும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








