மறைந்துபோன சைடு கார் அம்சத்துக்கு உயிரளிக்கும் பணியில் ஹோண்டா! ஃபிரண்ட ஓட்ட சொல்லிட்டு கால நீட்டிட்டு போகலாம்!
முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), டூ-வீலர்களில் பயன்படுத்தப்பட்டு வந்த சைடு கார் (Sidecar)-ஐ மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் சைடு கார் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு பேடண்ட் உரிமத்தைப் பெற்றதன் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, இதுகுறித்த ஆவணங்களும் தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றன. ஒரு காலத்தில் மோட்டார் சைக்கிள்களில் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்ததே இந்த பக்கவாட்டு கார்கள் ஆகும்.
இதையே தன்னுடைய பைக்குகளில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஹோண்டா நிறுவனம் தற்போது ஆராய தொடங்கி இருக்கின்றது. இன்றைய நிலவரப்படி ஒரு நிறுவனம்கூட இந்த வசதிக் கொண்ட இரண்டு சக்கர வாகனத்தை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் இதே நிலையே தென்படுகின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டூ-வீலர்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சைடு கார் அமைப்பு முழுமையாக பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்ட நிலையே தென்படுகின்றது. மேலும், இந்த பக்கவாட்டு கார்கள் அருங்காட்சியகங்களிலும், பழங்கால பைக் மீட்டெடுப்பாளர்களின் கராஜியில் மட்டுமே காட்சியளித்துக் கொண்டு உள்ளன.
இந்த மாதிரியான சூழலிலேயே எதிர்கால ஹோண்டா டூ-வீலர் ஒன்றில் இந்த அம்சம் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக தனித்துவமான ரசனை உள்ள இரண்டு சக்கர வாகன காதலர்களை தன் பக்கம் ஈர்க்க அது திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், சைடு கார் கொண்ட டூ-வீலர் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில், இப்போதே சைடு காரை கொண்ட டூ-வீலரை உருவாக்கும் பணிகளை ஹோண்டா தொடங்கியிருப்பதாகவும், அந்த பணிகள் மிகவும் தொடக்க நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே சைடு கார் கொண்ட ஹோண்டா டூ-வீலர் விற்பனைக்கு வர இன்னும் ஒரு சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என தெரிகின்றது. அதேவேளையில், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஹோண்டாவின் வருங்கால எலெக்ட்ரிக் பைக் ஒன்றிலேயே இந்த வசதி வழங்கப்படும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இது விற்பனைக்கு தயாராகும் எனில் இரண்டு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிப்பது சாத்தியமாகும். ரைடர், பின்னிருக்கை பயணி மற்றும் சைடு காரில் ஓர் பயணி என மூவர் இந்த வாகனத்தில் பயணித்துக் கொள்ள முடியும். ஆகையால், இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்தியா போன்ற நெரிசலான போக்குவரத்தைக் கொண்ட நாடுகளுக்கு இந்த மாதிரியான வாகனம் செட் ஆகுமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறையாக அமைந்திருக்கின்றது. அதேநேரத்தில் இந்த சைடு கார் கொண்ட மோட்டார்சைக்கிளின் இயக்கத்தை சாத்தியமானதாக மாற்றுவதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஹோண்டா சேர்க்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அந்தவகையில், சென்சார் வாயிலாக இயங்கும் தனி எலெக்ட்ரிக் மோட்டாரை சைடு காருக்கு ஹோண்டா வழங்கப்போவதாகக் கூறப்படுகின்றது. இது பைக்கின் இயக்கம் மற்றும் நிறுத்தத்தை நோட்டமிட்டு அதற்கேற்ப இயங்கும். தொடர்ந்து சைடு காரின் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமான ரைடு அனுபவத்திற்கான வசதிகளும் மிக தாராளமாக அதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது பேடண்ட் ஆவணங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
அந்தவகையில், சைடு காரின் பின் பக்கத்தில் ஸ்டாப் லைட்டும், முன் பக்கத்தில் ஓர் பிரகாசமான லைட்டும் வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர, அதிக சொகுசான இருக்கையும் அந்த சைடு காரில் வழங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், ஹாயான ரைடு அனுபவத்தை இந்த சைடு காரில் அமர்ந்து வருபவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் உருவாக்க பணிகள் தொடக்க நிலையில் இருப்பதால் அதுபற்றிய முழுமையான விபரங்களை வெளியிடவில்லை. அதேவேளையில், இதற்கு இப்போதே இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுவது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில வருடங்களிலேயே இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









