தமிழகத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஹோண்டா.. 5 மில்லியனுக்கும் அதிகமா விற்பனையான வேற என்ன பண்ணுவாங்க!
இந்தியாவில் ஹோண்டா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே தமிழர்கள் மத்தியிலும் இந்த நிறுவனத்தின் டூ-வீலர்களுக்கு மிக அமோகமான வரவேற்புக கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 5 மில்லியனுக்கும் அதிகமான ஹோண்டா இரண்டு சக்கர வாகன மாடல்கள் விற்பனையாகி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் புதிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன.
இதன் வாயிலாக, இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் என்பதை ஹோண்டா மீண்டும் அதிரடியாக உறுதி செய்திருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இப்போது வரை செய்யப்பட்ட விற்பனையே இந்த 5 மில்லியன் யூனிட் விற்பனை ஆகும்.

நிறுவனம் தமிழகத்தில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது. அந்தவகையில், 547 டச் பாயிண்டுகள் நெட்வொர்க்கை தமிழ்நாட்டில் ஹோண்டா உருவாக்கி இருக்கின்றது. இதில் 19 பிக்பிங் ஷோரூம் (BigWing showroom)-களும் அடங்கும். பிக்விங், இது ஓர் பிரீமியம் டூ-வீலர்களுக்கான ஷோரூம் ஆகும்.
நிறுவனத்தின் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டு இருக்கின்றது. இதனாலேயே நிறுவனம் இதற்கென தனி ஷோரூம்களை அமைத்து விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், இந்த ஷோரூம் நெட்வொர்க்கை அதிகப்படுத்தும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.
இதுமட்டுமில்லைங்க புதுமுக இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், விரைவில் ஆக்டிவா இவி இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் கீழ் நான்கு ஸ்கூட்டர் மாடல்களும், ஒன்பது வகையான மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
நிறுவனம் 110 சிசி முதல் 1800 சிசி வரையிலான திறன் கொண்ட டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 110 சிசி மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் ஆக்டிவா (Activa) மற்றும் டியோ (Dio) ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
தொடர்ந்து பைக் பிரிவில், ஷைன் 100 (Shine 100), சிடி 110 டிரீம் டீலக்ஸ் (CD 110 Dream Deluxe), லிவோ (Livo), ஷைன் 125 (Shine 125), எஸ்பி 125 (SP 125), யூனிகார்ன் (Unicorn), எஸ்பி 160 (SP160), ஹார்னெட் 2.0 (Hornet 2.0) சிபி 200எக்ஸ் (CB200X) ஆகியவையே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதுதவிர, பிக்விங் ஷோரூம் வாயிலாகவும் சில உலக தரம் வாய்ந்த டூ-வீலர் மாடல்களை ஹோண்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சிபி350 (CB350), ஹைனெஸ் சிபி350 (H'ness CB350), சிபி350ஆர்எஸ் (CB350RS), சிபி300ஆஃப் (CB300F), சிபி300ஆர் (CB300R) ஆகிய பைக் மாடல்களை ஹோண்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், என்எக்ஸ்500 (NX500), எக்ஸ்எல்750 டிரான்ஸ்லாப் (XL750 Transalp), ஆப்பிரிக்கா ட்வின் (Africa Twin) மற்றும் கோல்டு விங் (Gold Wing Tour) ஆகிய மாடல்களையும் ஹோண்டா தனது பிரீமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் ஹார்னெட் 2.0 (Hornet 2.0) மற்றும் சிபி200எக்ஸ் (CB200X) ஆகிய மோட்டார்சைக்கிள்களையும் பிக்விங் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்டுகள் என்பது அவ்வளவு சாதாரணமான எண்ணிக்கை அல்ல. மாபெரும் சாம்ராஜ்யத்தை தமிழகத்தில் ஹோண்டா கட்டி எழுப்பி இருக்கின்றது என்பதற்கு சான்றாகவே இந்த தகவல் அமைந்திருக்கின்றது. நிறுவனம் மிகப் பெரிய நெட்வொர்க்கையும், மிக சிறப்பான சேவையையும் வழங்கிக் கொண்டிருப்பதாலேயே தமிழர்கள் மத்தியில் இந்த அளவு மிக சிறப்பான வரவேற்பை அது பெற காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








