ஒரே மாதத்தில் 6 லட்சம் வாகனங்களை விற்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல! ஹோண்டா அசால்ட் பண்ணிட்டு இருக்கு!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் (Honda Motorcycle & Scooter), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் நடந்து முடிந்த 2024 அக்டோபர் மாதத்திலும் இலட்சக்கணக்கிலான ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை காட்டிலும் இது எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும், ஹோண்டாவில் இருந்து விற்பனை செய்யப்படும் 2-வீலர்களை பற்றியும், கடந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா மேற்கொண்ட மற்ற நடவடிக்கைகளை என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விளங்குகிறது. ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான சந்தையாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான ஹோண்டா 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 2024 அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில், மொத்தம் 5 லட்சத்து 97 ஆயிரத்து 711 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரை காட்டிலும் 21% அதிகமாகும். இந்த 5 லட்சத்து 97 ஆயிரத்து 711 வாகனங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 5 லட்சத்து 53 ஆயிரத்து 120 ஆகும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 591 ஆகும். இதில் உள்நாட்டு விற்பனை 20 சதவீதமும், வெளிநாட்டு ஏற்றுமதி 48 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் 10 ஆயிரம் வாகனங்களுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

2024 ஏப்ரல்- அக்டோபர் வரையில் இந்த 7 மாத காலத்தில் மொத்தம் 37 லட்சத்து 56 ஆயிரத்து 088 வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 34 லட்சத்து 34 ஆயிரத்து 539 வாகனங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 3 லட்சத்து 21 ஆயிரத்து 549 வாகனங்கள் ஆகும்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஹோண்டா 2-வீலர் நிறுவனம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. அவையாவன, வட-மத்திய இந்திய பகுதிகளான மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் உத்தரகாண்டில் ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை 1 கோடியை கடந்தது. அதேபோல், கர்நாடகாவில் ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 50 இலட்சத்தை கடந்த மாதத்தில் கடந்துள்ளது.

மேலும், கடந்த அக்டோபர் மாதத்தில் சிபி300எஃப் பைக்கை ஃப்ளெக்ஸ்-ஃப்யுல் ஆப்ஷனில் ஹோண்டா அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் 300சிசி ஃப்ளெக்ஸ்-ஃப்யுல் பைக்காக விளங்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப் ஷோரூம் கேரளாவின் கொச்சியில் புதியதாக ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
2-சக்கர வாகனங்களை விற்பனை செய்வதுடன், சாலையில் எவ்வாறு பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு திட்டங்களையும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 10 நகரங்களில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் இந்த விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளன. இதில் நமது தமிழ்நாட்டின் காஞ்சிபுரமும் ஒன்றாகும்.

மேலும், டிரைவிங் பயிற்சி மையங்களையும் இந்தியாவில் நிறைய பகுதிகளில் ஹோண்டா நிர்வகித்து வருகிறது. அவற்றுள், ஹரியானாவில் நடத்தப்படும் ஒரு மையத்தில் 7வது ஆண்டு நிறைவையும், பெங்களூரில் உள்ள மையத்தில் 4ஆம் ஆண்டு நிறைவையும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா கொண்டாடியது. மேலும், கடந்த மாதத்தில் IDEMITSU ஹோண்டா இந்தியா டேலண்ட் கோப்பையை ஹோண்டா ரேசிங் இந்தியா குழுவை சேர்ந்த ரைடர் மோஹ்சின் பரம்பன் வென்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த அக்டோபர் என்கிற ஒரு மாதத்தில் மட்டும் இத்தனை நடவடிக்கைகளில் ஹோண்டா ஈடுப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே, ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹோண்டா 2-வீலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









