கேமரா-ரேடார் அம்சங்களை பைக்கில் பொருத்தும் ஹோண்டா.. எமன் பாசை கயித்த எடுத்து விரட்டி வந்தாலும் தப்பிச்சுடலாம்!
இரண்டு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. இதனைக் கருத்தில் கொண்டே பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) டூ-வீலர்களுக்கான ஓர் சூப்பரான பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
அது கழுகின் பார்வை திறன் கொண்ட ஸ்டீரியோ கேமிரா (Stereo Camera) மற்றும் புதிய ரேடார் (Radar) அம்சத்தையே இரண்டு சக்கர வாகனங்களுக்காக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. ஹோண்டா இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பற்றிய தகவல் இணையத்தின் வாயிலாகவே வெளியாகி உள்ளது.

குறிப்பாக, அந்த தொழில்நுட்பங்களின் பேடண்ட் (Patent) படமே தற்போது இணைய உலகில் கசிந்திருக்கின்றது. அடாப்டீப் க்ரூஸ் கன்ட்ரோல (Adaptive Cruise Control)-க்கு வலு சேர்க்க இந்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், ஹோண்டா தற்போது வடிவமைத்துக் கொண்டிருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பைக் மாடல்களில் ஒன்றான ஆப்பிரிக்கா ட்வின் (Honda Africa Twin) மாடலுக்கே பொருந்தும்படி தயார் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் நிறுவனத்தின் மற்ற பிரீமியம் தர பைக்குகளிலும் புதிய பாதுகாப்பு சிஸ்டம் இடம் பெற செய்யப்படும். அதேவேளையில், ஹோண்டா இப்போதே இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இது நிறைவடையே இன்னும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள்கூட ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்தியாவில் உள்ள மோட்டார்சைக்கிள்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. நிறுவனம் முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலேயே இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்யும் என கூறப்படுகின்றது. இந்த பாதுகாப்பு அம்சத்தின் உருவாக்கம் பணிகள் நிறைவுறும்பட்சத்தில் அதை முதல்கட்டமாக பலகட்ட ஆய்விற்கு உட்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இங்கு தேர்ச்சி பெறும் பட்சத்திலேயே ஹோண்டா தன்னுடைய தயாரிப்புகளில் இந்த தொழில்நுட்பத்தை வழங்க ஆரம்பிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஸ்டீரியோ வசதிக் கொண்ட இரண்டு கேமிராக்களே வழங்கப்பட இருக்கின்றன. இந்த கேமிராக்கள் பயணத்தின்போது சாலையின் இருபுறமும் தீவிரமான கண்கானிப்பில் ஈடுபடும். அசம்பாவிதம் ஏற்படுத்தும் விதமாக ஏதேனும் நிகழ்வு இதன் கண்களில் படும் எனில், ஓர் மனிதனின் மூலையைப் போல செயல்பட்டு அது ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டத்தைத் தூண்டும்.
இதனால் பைக்கின் வேகம் குறைக்கப்பட்டு விபத்தில் சிக்காமல் அந்த பைக் காக்கப்படும். இந்த வேலைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையிலேயே ரேடார் தொழில்நுட்பமும் வழங்கப்படுகின்றது. இந்த சென்சார் வாகனம் மட்டுமின்றி ஆட்கள் நடமாட்டத்தையும் நோட்டமிட்டு வாகனத்தின் வேகத்தை குறைக்க மற்றும் ஆட்டோமேட்டிக் பிரேக்கை ஆக்டிவேட் செய்வது போன்றவற்றைச் செய்யும்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நிலவும் அதிக ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டே ஹோண்டா இந்த பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அவர்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் கொள்கை ஆகும். இந்தியாவில்கூட இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சில பாதுகாப்பு விதிகள் தீவிரமாகக் கண்கானிக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது. சென்னையில்கூட இரண்டு ஹெல்மெட் விஷயத்தில் மிகக் கடுமையான கெடுபிடி காட்டப்படுகின்றது. பைக் ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர் தலைக் கவசம் அணியவில்லை எனில் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல விதிகளை காவல்துறை இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விஷயத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


Click it and Unblock the Notifications








