கேடிஎம்-இல் இந்த பைக்குகளுக்கு தான் வெறித்தனமா வெயிட் பண்றோம்! புக் பண்ண, பணத்தை சேர்த்து வைக்க ரெடியாகுங்க!!
கேடிஎம் (KTM) நிறுவனம் அதன் இரு புதிய பைக்குகளை கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய பைக் வார கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. 390 அட்வென்ச்சர் எஸ் (390 Adventure S) மற்றும் 390 எண்டூரோ ஆர் (390 Enduro R) என்பன அந்த இரு புதிய கேடிஎம் பைக்குகள் ஆகும். விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய பைக்குகளை பற்றிய விபரங்களும் இந்திய பைக் வாரம் 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்திய பைக் வாரம் என்கிற பெயரிலான பைக் கண்காட்சி ஆனது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கோவாவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடத்தப்பட்டுவரும் 2024 இந்திய பைக் வார நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துக் கொண்டோம். வழக்கம்போல், இந்த முறையும் பல முன்னணி பைக் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளன.

அதில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் கேடிஎம் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் இரு புதிய 390சிசி பைக்குகளை கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தியுள்ளது. அவை தான், 390 அட்வென்ச்சர் எஸ் மற்றும் 390 எண்டூரோ ஆர் ஆகும். இதில் 390 அட்வென்ச்சர் எஸ் ஆனது இந்த கண்காட்சியின் மூலமாக முதல்முறையாக இந்திய மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இரு பைக்குகளையும் கேடிஎம் நிறுவனம் ஐரோப்பாவில் கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் EICMA கண்காட்சியில் முதல்முறையாக காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கேடிஎம் பைக்குகளுக்கான முன்பதிவுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கப்பட உள்ளன. ஆனால், இந்த பைக்குகளின் விலைகள் 2025 ஜனவரியில் தான் அறிவிக்கப்பட உள்ளது.

புதிய 390 அட்வென்ச்சர் எஸ் பைக் தோற்றத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கை ஒத்துக் காணப்படுகிறது. 390 ட்யூக் பைக்கில் வழங்கப்படும் அதே 5-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையை 390 அட்வென்ச்சர் எஸ் பைக்கிலும் காண முடிகிறது. மேலும், இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
இந்தியாவில் 500சிசி-க்கு கீழ் க்ரூஸ் கண்ட்ரோலை பெற்ற முதல் அட்வென்ச்சர் பைக் 390 அட்வென்ச்சர் எஸ் ஆகும். இந்த அட்வென்ச்சர் பைக்கில் வயர்-ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேடிஎம் 390 என்டூரோ ஆர் பைக்கை பொறுத்தவரையில், இது 390 அட்வென்ச்சர் எஸ் பைக்கை காட்டிலும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற பைக் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப மிகவும் குறைவான பாடி பேனல்கள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள 390 எண்டூரோ ஆர் பைக்கில் சிறிய அளவில் எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 390 அட்வென்ச்சர் எஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ள அளவிற்கு 390 எண்டூரோ ஆர் பைக்கில் வண்ண மயமான டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை. ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 390 எண்டூரோ ஆர் பைக்கில் முன் சக்கரத்தில் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் எஸ் மற்றும் எண்டுரோ ஆர் இந்த இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான 399சிசி எல்சி4சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதே என்ஜின் தான் விற்பனையில் உள்ள 390 ட்யூக் பைக்கிலும் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 44.25 பிஎச்பி மற்றும் 39 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப்பின் எக்ஸ்பல்ஸ் 200 பைக் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், அதனை கேடிஎம் உள்பட மற்ற நிறுவனங்களும் நன்கு பயன்படுத்தி கொள்கின்றன. கேடிஎம் 390 ட்யூக் பைக்கிற்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அது புதிய 390 அட்வென்ச்சர் எஸ் மற்றும் எண்டூரோ ஆர் பைக்குகளுக்கும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









