இன்னொரு ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! ரூ.1.10லட்சத்துக்கே இத வாங்கிடலாம்! ஒரு காரையே இழுத்துட்டு போகும்!
இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களில் ஆம்பியர் (Ampere) நிறுவனத்தின் நெக்சஸ் (Ampere Nexus)-ம் ஒன்றாகும். இதுவே தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
ஏத்தர் ரிஸ்தாவும் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே ஆகும். இதன் அறிமுகம் அரங்கேறி சில வாரங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே இதற்கு போட்டியாக ஆம்பியர் நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக இதற்கு ரூ. 1,09,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனத்தை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக ஆம்பியர் தயார் செய்திருக்கின்றது. மேலும், அதிக பயன்பாட்டை வழங்கும் நோக்கிலும் இதனை ஆம்பியர் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. மேலும், மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் வகையிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் செய்யப்பட்டு உள்ளது.
அந்தவகையில், ஹைபிரிட் ஸ்விங் ஆர்ம் உடன் இரட்டை சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது நீண்ட தூர பயணமோ அல்லது கரடு-முரடான சாலையில் பயணமோ எதுவாக இருந்தாலும் அந்த பயணத்தை மிக சிறந்ததாக மாற்றிவிடும். இத்துடன், காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வடிவமைப்பு மற்றும் காற்று எளிதில் நுழைந்து வாகனத்தை குளிர்விக்கும் ஆர்கிடெக்சரிலும் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, இதன் சேஸிஸ் வழக்கமான ஸ்கூட்டர்களின் சேஸிஸைவிட நான்கு மடங்கு அதிக உறுதியானது என ஆம்பியர் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், நிலையான மற்றும் நீடித்து உழைப்பை நெக்சஸ்-இல் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது. மேலும், அதிக எடையையும் இதனால் தாங்கிக் கொள்ள முடியும்.
இத்துடன், மிக சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை பெறும் விதமாக இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் சென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட 7 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிக வேகத்தில் ஆனாகும் திறனைக் கொண்டிருக்கின்றது. நெக்ஸ்.ஐஓ வசதி இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆம்பியர் நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 136 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 93 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 3 kWh எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
வழக்கமான பேட்டரி பேக்கைக் காட்டிலும் இது 30 சதவீதம் கூடுதல் ஆயுட்காலத்தைக் கொண்டது என ஆம்பியர் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், சீக்கிரமே பேட்டரியை மாற்ற வேண்டும் என்கிற பிரச்னை இருக்காது என தெரிகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் பொருத்தப்பட்டு இருப்பதே தெரியாது.

இதன் பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் மற்றும் 22 நிமிடங்களே போதுமானது. இதன் ஹெட்லைட் மிக சிறந்த பார்வை திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இதன் டெயில்லைட், நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த வடமுனை ஆலா பறவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் பெரிய இருக்கையும், மிக சிறந்த மற்றும் எடை குறைவான அலுமினியத்தால் தயார் செய்யப்பட்ட கை பிடியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் எந்த மாதிரியான சூழலை சமாளிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இது அதிகம் நீர் (மழை வெள்ளம்) நிறைந்த சாலையில்கூட பயணிக்கும் என தெரிவித்து இருக்கின்றது. ஆனால், நீர் நிலையின் ஆழம் பற்றிய தகவலை அது வெளியிடவில்லை. அதேவேளையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறமையைச் சோதிக்கும் பொருட்டு ஆம்பியர் நிறுவனம் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையில் சுமார் 10 ஆயிரம் கிமீ பயணத்திற்கு உட்படுத்தியது.
இந்த நீண்ட தூர சாகச பயணத்தின் வெற்றிக்கு பின்னரே தற்போது நெக்சஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஐந்து விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, சிட்டி, பவர், ரிவர்ஸ், லிம்ப் ஹோம் மோட் ஆகியவையே அவை ஆகும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 16 டிகிரி சாய்வான மேடுகளில் கூட ஏற முடியும் என கூறப்படுகின்றது. ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒய்-ஃபை இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, செல்போன் வரும் தகவல்களை அறியும் வசதி, மியூசிக்கைக் கன்ட்ரோல் செய்யும் வசதி என ஏகப்பட்ட சிறப்புகளை நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆம்பியர் வழங்கி இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு விதமான தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். நெக்சஸ் இஎக்ஸ், நெக்சஸ் எஸ்டி ஆகியவையே அவை ஆகும். இதில், நெக்சஸ் இஎக்ஸ் தேர்வின் விலையே ரூ. 1,09,900 ஆகும். நெக்சஸ் எஸ்டி தேர்விற்கு ரூ. 1,19,900 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இரண்டும் அறிமுக சிறப்பு விலை ஆகும். இவற்றின் உண்மையான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,19,900 மற்றும் ரூ. 1,29,900 ஆகும். எனவே விரைவில் இதன் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையாக சரக்கு நிரப்பப்பட்ட பிக்-அப் டிரக்கையே இழுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே ஆம்பியர் நெக்சஸ் தயார் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே குடும்பஸ்தர்களை கவரும் பொருட்டு ஆம்பியர் நெக்சஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் இருக்கைக்கு அடியில் ஹெல்மெட் தவிர இன்னும் சில பொருட்களையும் வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









