ஹீரோ ஸ்பிளெண்டருக்கு மட்டும் எப்படி இந்த அளவுக்கு மவுசு இருக்குனு தெரியலயே!! தேசிய பைக்காக அறிவிச்சுடலாம் போல!
கார்களை காட்டிலும், இந்தியாவில் 2-வீலர்களை வாங்குவதற்கே நிறைய கஸ்டமர்கள் உள்ளனர் என்பது எல்லாரும் அறிந்ததே. இன்னும் சொல்லப்போனால், உலகிலேயே எங்கும் விற்பனையாகாத அளவிற்கு இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஆனது அதிகமாக உள்ளது. இதனை வெளிக்காட்டுவதுபோல், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இதன்படி, கடந்த மாதத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கிய டாப்-10 இரு சக்கர வாகனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், ஹீரோ நிறுவனத்தின் 2-வீலர்களுக்கு கஸ்டமர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஆனது நீண்ட காலமாக இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலராக விளங்குகிறது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் மொத்தம் 3 லட்சத்து 2,934 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 89,930 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது 4.49%, அதாவது 13,004 யூனிட்கள் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2023 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் ஹீரோ ஸ்பிளெண்டர் தான். ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்திலும் வழக்கம்போல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 27,458 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையும் 2023 ஆகஸ்ட்டில் தற்போதைய எண்ணிக்கையை காட்டிலும் 5.86% குறைவாகவே பதிவாகி இருந்தது.

இந்த வரிசையில் 3வது இடத்திலும் ஹோண்டாவின் தயாரிப்பாக, ஹோண்டா ஷைன் பைக் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49,697 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 14,142 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், ஷைன் பைக்குகள் விற்பனை 31.15% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து, 4வது இட்த்தை பஜாஜ் பல்சர் பைக்குகள் பிடித்துள்ளன.
பஜாஜ் பல்சர் பைக்குகள் 125சிசி-இல் இருந்து 400சிசி வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமாக கடந்த மாதத்தில் 1 லட்சத்து 16,250 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் 90,685 பஜாஜ் பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் 89,327 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் 70,065 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், 19,262 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் 84,607 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2023 ஆகஸ்ட்டில் 73,006 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. 7வது இடத்தை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 62,433 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. இதற்கடுத்து, 8வது மற்றும் 9வது இடங்களில் டிவிஎஸ் எக்ஸ்.எல் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 44,546 மற்றும் 41,705 ஆகும். கடைசி 10வது இடத்தில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 34,705 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்த ரிப்போர்ட்களை பார்க்கும் போது தெரிகிறது. குறிப்பாக, ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது சமீப காலமாக மாதந்தோறும் 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரையில் பதிவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









