ஸ்கூட்டர் மார்க்கெட்டை துவம்சம் செய்துவரும் ஓலா! பழம் தின்று கொட்டை போட்ட டிவிஎஸ் எல்லாம் அண்ணாந்து பார்க்குது
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலானோர் தேர்வு செய்வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரு சில நிறுவனங்கள் பல வருடங்களாக மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் சந்தையில் புதியதாக நுழைந்த உடனேயே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஓலா எலக்ட்ரிக் ஆகும். இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் முன்னணியில் உள்ளது. ஏனென்றால், ஓலாவின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது.
இதற்கடுத்த இடங்களில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க. பெங்களூரை சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. எஸ்1 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புதிய வேரியண்ட்கள் கடந்த காலங்களில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலமாக, இந்தியாவின் நம்பர் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஓலா எஸ்1 இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 68,953 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 38,422 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் அதிகப்பட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 53,320 எஸ்1 ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் விற்பனை செய்தது. குறைந்தப்பட்சமாக, ஜனவரி மாதத்தில் 32,252 எஸ்1 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஓலா எஸ்1 ஸ்கூட்டருக்கு அடுத்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 2வது இடத்தில் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1 லட்சத்து 1,897 ஐக்யூப் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 14,557 ஸ்கூட்டர்கள் ஆகும். ஓலா எஸ்1 ஸ்கூட்டர்கள் விற்பனையாகுவதில் பாதி எண்ணிக்கையிலான ஐக்யூப் ஸ்கூட்டர்கள் கூட விற்பனையாகுவது இல்லை என்பதை தான் இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், இந்தியாவின் நம்பர்-02 எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் விளங்குகிறது.
2024 ஜனவரி - ஜூலையில் அதிகப்பட்சமாக கடந்த ஜூலை மாதத்தில் 21,064 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குறைந்தப்பட்சமாக ஜனவரியில் வெறும் 1,562 ஐக்யூப் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. 3வது இடத்தில் பஜாஜ் சேத்தக் உள்ளது. டிவிஎஸ் ஐக்யூப்பிற்கு போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த சேத்தக் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்தமாக 1 லட்சத்து 596 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4வது இடத்தில் ஏத்தர் எனர்ஜியின் 450, ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இரண்டையும் சேர்த்து இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 69,684 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. சராசரியாக 9,955 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஏத்தர் ஸ்கூட்டர்கள் அதிகப்பட்சமாக ஜனவரி மாதத்தில் 11,865 ஸ்கூட்டர்களும், குறைந்தப்பட்சமாக மே மாதத்தில் வெறும் 7,023 ஸ்கூட்டர்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த லிஸ்ட்டில் நாம் கடைசியாக பார்க்கவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹீரோ விடா ஆகும். ஹீரோ மோட்டோகார்பின் ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான விடா வி1 ஆனது இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்தம் 20,918 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு சராசரியாக 2,988 ஆகும். அதிகப்பட்சமாக கடந்த ஜூலை மாதத்தில் 4,600 ஹீரோ விடா வி1 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனமாக ஒலா எலக்ட்ரிக் விளங்குகிறது. அதற்கேற்றவாறு அவ்வப்போது புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஓலா எலக்ட்ரிக் மறப்பதில்லை. வரும் காலங்களிலும் இதே நிலைமை தான் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









