ஹீரோ- ஹோண்டா கூட்டணி இப்போது சாத்தியமாகினால்... மாதத்திற்கு 10 லட்ச வாகனங்கள் சேல்ஸ் நிச்சயம்!!
உலகின் மிக பெரிய 2-வீலர் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என்றால், அது மிகையில்லை. ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பல வெளிநாட்டு 2-வீலர் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வாகனங்களை அறிமுகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைக்கு இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்கள் என்று பார்த்தால், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா, டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு உள்ளிட்டவை ஆகும். இவற்றின் கடந்த 2024 ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்பில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோவில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 92,263 ஆகும்.

கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 4 லட்சத்து 72,947 இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஹீரோ 2-வீலர்கள் விற்பனை ஆனது 19,316 அதிகரித்துள்ளது. ஹீரோவிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் ஹோண்டா உள்ளது. கடந்த மாதத்தில் ஹோண்டாவில் இருந்து 4 லட்சத்து 91,678 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஹீரோவிற்கும் ஹோண்டாவிற்கும் இடையே வெறும் 585 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே வித்தியாசம் ஆகும். ஆனால், 2023 ஆகஸ்ட்டில் 20 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் வித்தியாசம் இருந்தது. ஏனெனில், அந்த வருடத்தில் 4 லட்சத்து 51,200 ஹோண்டா 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 40,478 ஹோண்டா 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கடுத்து 3வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் 2 லட்சத்து 89,073 இரு சக்கர வாகனங்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் 32,154 வாகனங்கள் குறைவாக 2 லட்சத்து 56,919 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. டிவிஎஸ் மோட்டாருக்கு அடுத்து 4வது இடத்தை வழக்கம்போல் பஜாஜ் ஆட்டோ பிடித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோவில் இருந்து 2 லட்சத்து 8,621 இரு சக்கர வாகனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2023 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 60,820 2-வீல்ர்களை மட்டுமே பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில் பார்க்கும்போது பஜாஜ் 2-வீலர்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது சுமார் 47,801 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

இந்த வரிசையில் 5வது இடத்தை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் பிடித்துள்ளது. சுஸுகியில் இருந்து 87,480 2-வீலர்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 83,045 சுஸுகி 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்களை போன்று சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.
இந்த லிஸ்ட்டில் கடைசியாக நாம் பார்க்க போகும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு ஆகும். கடந்த மாதத்தில் ராயல் என்ஃபீல்டில் இருந்து 65,623 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் 3,770 பைக்குகள் அதிகமாக 69,393 பைக்குகள் ராயல் என்ஃபீல்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் நாம் பார்த்ததிலேயே ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை மட்டும் தான் 2023 ஆகஸ்ட்டை விட குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 3இல் ஒருவர் நிச்சயமாக ஹீரோ அல்லது ஹோண்டா 2-வீலரை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2-வீலர் விற்பனையில் ஹீரோவிற்கும், ஹோண்டாவிற்கும் இடையேயான வித்தியாசம் மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இதனால், வரும் மாதங்களில் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப்பை ஹோண்டா நிறுவனம் முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









