வெறும் ரூ.85 ஆயிரத்தில் இவ்வளவு சூப்பரான ஸ்கூட்டரா!! ரன்னிங் செலவு ரொம்ப குறைவு!
ஐவூமி (iVOOMi), புனேவை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனம். சந்தையில் பல்வேறு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துவரும் இந்த நிறுவனம் புதிய எஸ்1 லைட் (S1 Lite) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐவூமி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களையும், நாட்டின் எந்தெந்த மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. அவ்வாறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக களம்புகுந்ததே ஐவூமி ஆகும்.

இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக விற்பனைக்கு வந்துள்ள எஸ்1 லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் துவங்கியுள்ளன. ஐவூமி நிறுவனத்திற்கு மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன.
அந்த ஷோரூம்களில் புதிய எஸ்1 லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விருப்பப்படுவோர் புக் செய்யலாம். எஸ்1 லைட் இ-ஸ்கூட்டரில் 60 வோல்ட் 52 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ஐவூமி தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தை ஐவூமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்கூட்டருடன் வழங்கப்படும் சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக கிட்டத்தட்ட 4 மணிநேரங்கள் தேவைப்படுமாம். இந்த பேட்டரியின் ஆற்றலை பெற்று இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 1.2 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 10.1 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. எஸ்1 லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 53kmph ஆகும்.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஸ்ப்ரிங் காயிலும் உள்ளன. ஸ்கூட்டரை நிறுத்த பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் உள்ளது. இருக்கைக்கு அடியில் 18 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதியை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 150 கிலோ ஆகும்.

ஸ்கூட்டரின் சக்கரங்களை 10 இன்ச் அல்லது 12 இன்ச்சில் வாங்கலாம். ஹேண்டில்பாருக்கு மத்தியில் எல்இடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ரூ.4,999ஐ கூடுதலாக செலுத்துவதன் மூலம் இந்த டிஸ்பிளேவில் DTE இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் எஸ்.எம்.எஸ்/கால் அலார்ட்ஸ் உடன் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவற்றை பெறலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டுவரும் நிறுவனங்களுள் ஐவூமியும் ஒன்றாகும். அதன் ஒரு பகுதியாகவே தற்போது புதியதாக எஸ்1 லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையும் பெரியதாக அதிகம் கிடையாது.


Click it and Unblock the Notifications









