ராயல் என்ஃபீல்டு தலை தெறித்து ஓட போகுது... சூப்பரான பைக்கை சைலண்டாக அறிமுகம் செய்த ஜாவா!!
கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் புதிய ஜாவா 42 எஃப்.ஜே (Jawa 42 FJ) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஜாவா 42 என்கிற 350சிசி பைக்கின் புதிய வேரியண்ட்டாக 42 எஃப்.ஜே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாவா 42 மற்றும் 42 பாப்பர் பைக்குகள் விற்பனையில் உள்ளன. ஜாவா பைக் பிராண்ட் நிறுவனரான ஃப்ராண்டிசெக் ஜனேசேக்கின் நினைவாக புதிய ஜாவா 42 பைக்கிற்கு எஃப்ஜே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. டெலிவிரிகள் வருகிற அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேரெதிர் போட்டியாக விளங்கும் ஜாவா 42 எஃப்.ஜே பைக்கின் சிறப்பம்சங்களை 5 பிரிவுகளாக பிரித்து இந்த தொகுப்பில் வழங்கியுள்ளோம்.

பெயிண்ட் ஆப்ஷன்கள் & விலைகள்: புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக் ஆனது மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீப் ப்ளாக் மேட் ரெட் க்ளாட், டீப் ப்ளாக் மேட் ப்ளாக் க்ளாட், காஸ்மோ ப்ளூ மேட், மைஸ்டிக் காப்பர், அரோரா க்ரீன் மேட், அரோரா க்ரீன் மேட் ஸ்போக் என்பன அந்த 6 கலர் ஆப்ஷன்கள் ஆகும். இவை ஒவ்வொன்றிலும் இந்த பைக் ரூ.1.99 லட்சத்தில் இருந்து ரூ.2.20 லட்சம் வரையில் ஒவ்வொரு விதமான விலைகளில் கிடைக்கும்.
தோற்றம்: 42 எஃப்ஜே பைக்கில் பிரஷ் செய்யப்பட்ட அலுமினியம் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பெட்ரோல் டேங்கை இந்தியாவில் பெறும் முதல் 350சிசி பைக் இது என கூறப்படுகிறது. மேலும், மேற்கூறப்பட்ட கலர் ஆப்ஷன்களுக்கு இந்த பெட்ரோல் டேங்க் ஏற்றதாக இருக்கும். பெட்ரோல் டேங்கை போன்று, ஹெட்லேம்ப் ஹோல்டர் மற்றும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான கம்பியும் அலுமினியத்தில் கிடைக்கும்.

இவ்வளவு ஏன், ரைடர் கால் வைக்கும் ஃபுட்பெக்ஸ் கூட அலுமினியத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இருக்கை நன்கு அகலமானதாகவும், தட்டையானதாகவும் உள்ளது. இருக்கையை பிரீமியம் தரத்திலான தையல்களுடன் வடிவமைத்துள்ளதால், சவுகரியத்திற்கு எந்தவொரு குறையும் இருக்காது. மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் பைக்கிற்கு மாடர்ன் தோற்றத்தை தருகிறது.
தொழிற்நுட்ப வசதிகள்: எல்இடி விளக்குகள், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்ட மாடர்ன் அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக் கிளாசிக் தோற்றத்தை கொண்டிருப்பினும், மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.

என்ஜின்: ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் 350சிசி ஆல்பா2 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 29.2 எச்பி மற்றும் 29.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. க்ளட்ச்சுக்காக அசிஸ்ட் & ஸ்லிப் ஃபங்க்ஷன் இந்த பைக்கில் உள்ளது.
மெக்கானிக்கல் பாகங்கள்: டபுள் க்ராடில் ஃப்ரேமில் உருவாக்கப்படும் ஜாவா 42 எஃப்.ஜே பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 1,440மிமீ ஆகும். மற்ற ஜாவா பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த பைக்கில் சப் ஃப்ரேம் சற்று வித்தியாசமானது ஆகும். தரையில் இருந்து பைக்கின் என்ஜின் ஆனது 178மிமீ உயரத்தில் உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 135மிமீ டிராவலும், பின்பக்கத்தில் 100மிமீ டிராவலும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 350சிசி பைக்குகளை விற்பனை செய்வதில் ராயல் என்ஃபீல்டு தான் முன்னிலையில் உள்ளது. அதன் ஆதிக்கத்தை உடைக்கும் விதமாக தொடர்ச்சியாக புது, புது 350சிசி பைக்குகளை ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதே ஜாவா 42 எஃப்ஜே ஆகும்.


Click it and Unblock the Notifications









