எக்சாஸ்ட் மஃப்ளர் மற்றும் பின் பக்க சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றி தரும் ஜாவா! யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?
ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சிலருக்கு இலவசமாக எக்சாஸ்ட் மஃப்ளர் (Exhaust Mufflers) மற்றும் பின் பக்க சஸ்பென்ஷன் (Rear Suspension) இலவசமாக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும்? எந்த திட்டத்தின்கீழ் இந்த இலவசங்களை நிறுவனம் அறிவித்து இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்கள் சிலவற்றில் சிறப்பு சர்வீஸ் கேம்ப் (Service Camp)-ஐ தொடங்கி இருக்கின்றது. இந்த சர்வீஸ் கேம்ப் வாயிலாக பல்வேறு சிறப்பு சேவைகளை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

அந்தவகையிலேயே, மும்பை வாடிக்கையாளர்களுக்கு எக்சாஸ்ட் மஃப்ளர் மற்றும் பின் பக்க சஸ்பென்ஷனை எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தர இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. அதாவது கட்டணமே இல்லாமல் சிறப்பு சர்வீஸ் முகாமில் கலந்துக் கொள்ள இருப்பவர்களுக்கு நிறுவனம் வழங்க இருக்கின்றது.
இந்த சிறப்பு சலுகை மும்பை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மும்பையில் பந்த்ரா மற்றும் கோர்கான் எனும் இரண்டு பகுதியிலேயே தற்போது ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பகுதி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது.
ஆனால், அந்த மோட்டார்சைக்கிள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும் என்கிற நிபந்தனையை நிறுவனம் முன் வைத்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த திட்டத்தின் வாயிலாக ஆயிரக் கணக்கானோர் பலனடைய இருக்கின்றனர். அதேவேளையில், இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 45 ஆயிரம் யூனிட்டு மோட்டார்சைக்கிள்களை ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனைச் செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எக்சாஸ்ட் மஃப்ளர் மற்றும் பின் பக்க சஸ்பென்ஷன் இலவசங்களைத் தொடர்ந்து கூட்டப்பட்ட வாரண்டியையும் அந்த வாடிக்கையாளர்களுக்கு ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், பைக்கின் தரம் மற்றும் நிலையைப் பொருத்தே இந்த கூட்டப்பட்ட வாரண்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த தகவல் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த திட்டம் மும்பைக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்தியாவில் இப்போதும் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி ஜாவா பிராண்டின்கீழ் நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஜாவா 350 (Jawa 350), ஜாவா 42 (Jawa 42), ஜாவா 42 பாபர் (Jawa Fourty Two Bobber), ஜாவா பெராக் (Jawa Perak) ஆகியவையே அவை ஆகும்.
இதில், நிறுவனத்தின் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக ஜாவா 350 இருக்கின்றது. 2.15 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது இந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.
யெஸ்டி பிராண்டின்கீழ் மூன்று விதமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரோட்ஸ்டர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் அட்வென்சர் ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்று தயாரிப்புகளும்கூட ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் வகையிலேயே இந்தியா கொண்டு வரப்பட்டவை ஆகும். இதில், ரோட்ஸ்டரே விலை குறைவான யெஸ்டி தயாரிப்பாகும். இதன் விலை ரூ. 2.08 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பை நகர மக்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகையை ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் அறிவிப்பதற்கான காரணம் தெரியவில்லை. சில நேரங்களில் நிறுவனங்கள் உற்பத்தி கோளாறு காரணமாக வாகனங்களுக்கு அழைப்பு விடுத்து அந்த கோளாறான பாகங்களை ரீ-பீளேஸ் செய்வது வழக்கம். ஆனால், இது அதுமாதிரியான ஒன்று கிடையாது.


Click it and Unblock the Notifications








