ஜாவாவில் இப்படியொரு பைக்கை வாங்கிவிட்டால் ஏரியாவில் கெத்து காட்டலாம்!! புது கலர் ஆப்ஷன் அறிமுகம்!
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனம் அதன் பிரபலமான ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளை புதிய பெயிண்ட் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இனி எந்தெந்த நிறங்களில் ஜாவா பெராக் பைக்கை வாங்கலாம் என்பதையும், புதிய ஜாவா பெராக் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எத்தனை புதிய, புதிய மோட்டார்சைக்கிள்கள் வந்தாலும், சிங்கிள் சீட் உடன் கிடைக்கும் 'பாப்பர்' ஸ்டைல் பைக்குகள் மீது எப்போதுமே ஒரு தனி கிரேஸ் உள்ளது. இருப்பினும், பட்ஜெட் விலையில் பைக்கை வாங்கும் நம் இந்தியர்கள் மத்தியில் பாப்பர் மோட்டார்சைக்கிள்கள் எடுபடவில்லை. இதனால்தான் நம் நாட்டில் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த ரக பைக்குகள் விற்பனையாகுகின்றன.

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பாப்பர்-ஸ்டைல் பைக் ஜாவா பெராக் ஆகும். கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜாவா பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையில் விற்பனை செய்யப்படும் ஜாவா பெராக் பைக்கில் புதியதாக ஸ்டீல்த் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பெயிண்ட் ஆப்ஷனில் பெராக் பைக் முற்றிலும் பித்தளை நிறத்தில் ஓல்டு கிளாசிக் பைக்குகளை போன்று கிடைக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஸ்டீல்த் மேட் பிளாக் மற்றும் மேட் கிரே என்ற இரு நிறங்களில் பைக் கிடைக்கும். ஜாவா பெராக் பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், 7-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கை பெறும் ஜாவா பெராக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2 லட்சத்து 13,187 ஆக உள்ளது. க்ரூஸர் பைக்குகளை போன்று, ஜாவா பெராக் பைக்கும் தாழ்வான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு, ரைடர் கால் வைக்கும் பகுதி பைக்கிற்கு நன்கு முன்னாக்கி வழங்கப்பட்டுள்ளது.
ஜாவா பெராக்கை போன்று ஜாவா 42 பாப்பர் பைக்கிலும் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெராக்கை போல், பாப்பர்-ஸ்டைல் பைக்கான ஜாவா 42 பாப்பரில் புதியதாக அலாய் சக்கர வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் இனி, ஸ்போக் சக்கரங்கள் அல்லது அலாய் சக்கரங்களில் ஜாவா 42 பாப்பர் பைக்கை வாங்கலாம்.

மூன் ஸ்டோன் வெள்ளை, மைஸ்டிக் காப்பர், ஜாஸ்பர் ரெட் மற்றும் பிளாக் மிரர் உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களில் 42 பாப்பர் கிடைக்கிறது. இவற்றில் ஒவ்வொரு பெயிண்ட் ஆப்ஷனிலும் ஒவ்வொரு விதமான விலைகளில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலைகளை உயர்த்தியும், குறைத்தும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சில திருத்தங்களை செய்துள்ளது.
ஜாவா 42 பாப்பர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2,09,500-இல் இருந்து ரூ.2,29,500 வரையில் உள்ளன. மார்க்கெட்டில் ஜாவா 42 என்கிற பைக்கும் விற்பனையில் உள்ளது. அது 2 சீட்களுடன் கிடைக்கிறது. அதன், பாப்பர் வெர்சன் தான் ஜாவா 42 பாப்பர் ஆகும். ஜாவா பெராக்கை போல் இல்லாமல், பல்வேறு வண்ண நிறங்களில் ஜாவா 42 பாப்பர் பைக்கை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா பைக்குகளுக்கு மிக பெரிய போட்டியாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்ளன. ஆதலால், போட்டியை சமாளிக்க வேண்டுமெனில், இவ்வாறான புது, புது அப்டேட்கள் அவ்வப்போது அவசியமாகின்றன. ஜாவா பெராக் பைக்கிற்கு ஸ்டீல்த் எடிசன் பெயிண்ட் உண்மையில் அசத்தலாக உள்ளது.


Click it and Unblock the Notifications









