இந்த பைக் ஏற்கனவே செம்ம அழகா இருக்கும், இதுல இந்த வண்ண தேர்வை வேற அறிமுகம் செஞ்சிருக்காங்களா.. சூப்பர் அப்டேட்
கவாஸாகி (Kawasaki) நிறுவனத்தின் அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக் மாடல்களில் ஒன்றாக நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) இருக்கின்றது. இந்த அழகான பைக்கையே கூடுதல் அழகானதாக காண்பிக்கின்ற புதிய நிற தேர்வை இந்த பைக்கில் அறிமுகம் செய்திருக்கின்றது, கவாஸாகி நிறுவனம். அது என்ன நிற தேர்வு என்கிற விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இத்துடன், பைக்கில் வேறு ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றதா? மற்றும் அந்த பைக்கின் சிறப்புகள் என்ன? விலை விபரம் உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கவாஸாகி நிறுவனம் தன்னுடைய 2025 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் மாடலை உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய நிற தேர்வுகளுடன் இந்த பைக்கை அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வேறு எந்த மாற்றங்களும் இந்த பைக்கில் கவாஸாகி செய்யவில்லை. எனவே எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த பைக் தற்போது உள்ள வெர்ஷனைப் போலவே அப்படியே இருக்கின்றது.

கவாஸாகி நிறுவனம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அதன் நிஞ்சா இசட்எக்ஸ் 4ஆர்ஆர் (Ninja ZX 4RR) பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது அது புதிய நிற தேர்வுகளுடன் இசட்எக்ஸ்-6ஆர் மாடலை உலக அளவில் கவாஸாகி அறிமுகம் செய்திருக்கின்றது.
விரைவில் இதனை இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக 2025 நிஞ்சா இசட்எக்ஸ் 6ஆர் இருக்கின்றது. இதில் புதிய நிற தேர்வை கவாஸாகி அறிமுகம் செய்திருப்பது அந்த பைக்கை அதிகம் நேசிப்பவர்களைக் கூடுதலாக கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஒன்றல்ல, இரண்டு புதிய நிற தேர்வுகளையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. பியர்ல் ரோபோட்டிக் ஒயிட்/ மெட்டாலிக் கிராஃபைட் கிரே (Pearl Robotic White / Metallic Graphite Gray) மற்றும் மெட்டாலிக் மேட் டார்க் கிரே / இபோனி (Metallic Matte Dark Gray/ Ebony) ஆகிய புதிய நிற தேர்வுகளே இதில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதே நிற தேர்வுகளுடனேயே கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த பைக் இரண்டு விதமான நிற தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கிரே/ பிளாக் மற்றும் லைக் கிரீன்/ பிளாக் ஆகியவையே அவை ஆகும்.
ரூ. 11.09 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மாடல் தற்போது ரூ. 11.20 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எஞ்சினை பொருத்த வரை நிஞ்ஜா இசட்எக்ஸ்-6ஆர்-இல் 636 சிசி, இன்லைன்-4 சிலிண்டர் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்மில் 129 எச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்மில் 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த பைக்கில் அலுமினியம் பெரிமீட்டர் பிரேம், ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் 17 அங்குல சக்கரங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த பைக்கின் வலுவான கட்டமைப்பு, அதீத செயல்திறனை பராமரிக்க ஏதுவாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் கவாஸாகி நிஞ்சா பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் இந்த பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் பைக் காதலர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கவாஸாகி நிறுவனம் அதன் 2025 இசட்எக்ஸ் 6ஆர் மாடலை உலக அளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது டூ-வீலர் பிரியர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








