ரூ.5 லட்சம் இருந்தால் எந்த பைக்கை வாங்கலாம்? கவாஸாகி புது பைக்கை சேல்ஸ்க்கு கொண்டுவந்து இருக்கு!!
கவாஸாகி நிஞ்சா 500 (Kawasaki Ninja 500), கவாஸாகியில் இருந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஸ்போர்ட்ஸ் ரக பைக். ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் கம்மியான விலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனை செய்ய வேண்டும் மற்றும் அதனை மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என சமீப ஆண்டுகளாக புதிய புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.
இதன்படி நிஞ்சா 300, நிஞ்சா 400 என இரு பைக்குகளை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஆனால், 400சிசி கவாஸாகி பைக்கான நிஞ்சா 400-இன் விலை ஆனது சுமார் ரூ.5.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.6 லட்சம் வந்துவிடும். இங்கே தான் ஒரு விஷயத்தை கவாஸாகி மறந்துவிடுகிறது. இந்தியாவில் விலை குறைவான மோட்டார்சைக்கிள்கள் தான் சிறப்பாக விற்பனையாகும்.

புதிய நிஞ்சா 500 பைக்கை ரூ.5.24 லட்சம் என்கிற விலையில் கவாஸாகி அறிமுகம் செய்துள்ளது. ஆம், புதிய நிஞ்சா 500 பைக்கும் நிஞ்சா 400-இன் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிஞ்சா 500 பைக்கிற்கு விற்பனையில் அப்ரிலியா ஆர்.எஸ்457, யமஹா ஆர்3 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் போட்டியாக இருக்கின்றன. அவற்றுடன் இந்த புதிய கவாஸாகி பைக்கை இந்த தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்கலாம்.
என்ஜின் அவுட்-புட்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பைக்குகளிலும் லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், நிஞ்சா 500 மற்றும் அப்ரிலியா பைக்கில் மட்டுமே 450சிசி ரேஞ்சில் என்ஜின் பொருத்தப்படுகிறது. யமஹா ஆர்3-இல் 321சிசி என்ஜினும், ஆர்சி390 பைக்கில் 373சிசி என்ஜினும் பொருத்தப்படுகிறது. ஆனால் என்ஜின் அவுட்-புட் பவரில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. யமஹா பைக்கில் டார்க் திறன் கொஞ்சம் குறைவாகவே கிடைக்கிறது.

எடை & அளவுகள்: சிறிய அளவிலான என்ஜினை பெறுவதால், யமஹா ஆர்3 பைக்கின் எடை குறைவாக உள்ளது. அதேபோல், தரையில் இருந்து ரைடர் சீட் அமைந்திருக்கும் உயரமும் இந்த யமஹா பைக்கில் குறைவாக உள்ளது. இந்த 4 பைக்குகளில் கேடிஎம் ஆர்சி390 நன்கு நீளமானதாகவும், உயரமானதாகவும் உள்ளது. நிஞ்சா 500 மற்றும் யமஹா ஆர்3 பைக்கில் மட்டுமே 14 லிட்டர்களில் பெட்ரோல் டேங்க் கிடைக்கிறது. மற்றவைகளில் சற்று குறைவே.
சஸ்பென்ஷன் & பிரேக்: ரூ.5.24 லட்சத்தில் மற்றவைகளை காட்டிலும் விலைமிக்கதாக இருப்பினும் புதிய நிஞ்சா 500 பைக்கில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மட்டுமே பொருத்தப்படுகின்றன. ஆனால், மற்றவைகளில் தலைக்கீழான ஃபோர்க்குகள் கொடுக்கப்படுகின்றன. பிரேக் சிஸ்டத்தை பொறுத்தவரையில், இந்த 4 பைக்குகளுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்திலும் டிஸ்க் பிரேக்குகள் தான் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்: ஒரேயொரு ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிஞ்சா 500 பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரைடிங் மோட்கள் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இல்லை, இவற்றை அப்ரிலியா ஆர்.எஸ்457 மற்றும் யமஹா ஆர்3 பைக்கில் மட்டுமே காண முடிகிறது. அதேபோல், கேடிஎம் மற்றும் அப்ரிலியா பைக்குகளில் வழங்கப்படும் டிஎஃப்டி டிஸ்பிளேவை நிஞ்சா 500 பைக் பெறவில்லை.
விலைகள்: புதிய நிஞ்சா 500 பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.5.24 லட்சமாக கவாஸாகி நிர்ணயித்துள்ளது. அதாவது, இந்த விலைகள் பின்னர் காலத்தில் அதிகரிக்கப்படலாம். ஆனால், அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.10 லட்சமாகவும், யமஹா ஆர்3 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.65 லட்சமாகவும், கேடிஎம் ஆர்சி390 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.18 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு விலையில் இருந்து எல்லாவற்றிலும் புதிய கவாஸாகி நிஞ்சா 500 பைக்கை காட்டிலும் மற்ற பைக்குகள் சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், கவாஸாகி பிராண்டில் இருந்து ஒரு பைக்கை வாங்குகிறோம் என்றாலே தனி கெத்துதான். ரூ.5.24 லட்சம் விலையை மட்டும் இன்னும் கொஞ்சம் குறைவாக நிர்ணயித்து இருந்தால் நிஞ்சா 500 ஏற்கக்கூடிய பைக் ஆகும். இருப்பினும், பொறுத்திருந்து பார்ப்போம், கவாஸாகி நிஞ்சா 500 மார்க்கெட்டில் வெற்றி பெறுமா என்று.


Click it and Unblock the Notifications









