எஸ்யூவி காரின் விலையில் புது கவாஸாகி பைக்... மேட்-இன்-இந்தியா கிடையாது!! விலையை மட்டும் பார்க்காதீங்க!
கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் புதிய இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் (Ninja ZX-4RR) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து பல்வேறு மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒன்றாக புதிய கவாஸாகி இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் இணைந்துள்ளது. இது ஒரு 400சிசி கவாஸாகி பைக் தான். இருப்பினும், இதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விலையில் இந்த புது கவாஸாகி பைக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது? இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கவாஸாகி இந்தியா நிறுவனம் கடந்த மே மாத துவக்கத்தில் புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மோட்டார்சைக்கிளை அதன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தது. அதுதான், நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் ஆகும். இந்த கவாஸாகி பைக் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மற்றொரு 400சிசி கவாஸாகி பைக்கான நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆரை காட்டிலும் விலையுயர்ந்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் அதற்கேற்ப கூடுதல் ஆற்றல்மிக்கதாக உருவாக்கப்படுகிறது. ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த புதிய பைக்கை இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் உற்பத்தி செய்ய போவதில்லை. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதன் காரணமாகவே, இந்த பைக்கின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 399சிசி லிக்யுடு-கூல்டு, இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 14,500 ஆர்பிஎம்-இல் 76 பிஎச்பி மற்றும் 13,000 ஆர்பிஎம்-இல் 37.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜினின் சூட்டை குளிர்விக்க பிரத்யேகமான ஏர் இண்டேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரக்ஷ்னல் குயிக்-ஷிஃப்டர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் எடை 189 கிலோ ஆகும். சஸ்பென்ஷனுக்கு பைக்கின் முன்பக்கத்தில் 37மிமீ-இல் யுஎஸ்டி ஷோவா ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீலோடு-அட்ஜெஸ்டபிள் ஷோவா BFRC லைட் மோனோஷாக்கும் இணைக்கப்பட்டு உள்ளது.
பைக்கை நிறுத்த, முன் சக்கரத்தில் 290மிமீ-இல் செமி-ஃப்ளோட்டிங் டபுள் டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஹேண்டில்பாருக்கு மத்தியில் ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடியதாக 4.3-இன்ச்சில் டிஎஃப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மொத்தம் 4 விதமான ரைடிங் மோட்களை பெறலாம்.

பைக்கை சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் பைக்கிற்கு விற்பனையில் நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை. பொதுவாக, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் இவ்வாறான பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், விருப்பப்படுவோர் கவாஸாகி டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை விரைவாக அணுகவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி பைக்குகள் பொதுவாகவே விலைமிக்கவை என்பது நமக்கு தெரியும். நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கை விட புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர்.ஆர் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் அதிகமாகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான விலைக்கு முக்கிய காரணம், இந்த புதிய கவாஸாகி பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாமல், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகும்.


Click it and Unblock the Notifications









