இந்த பைக்கோட எக்சாஸ்ட் பைப்-ல இருந்து புகை வராது.. நீராவிதான் வரும்... கவாஸாகியின் ஹைட்ரஜனில் இயங்கும் பைக்!
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), அதன் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இரண்டு சக்கர வாகன மாடலை காட்சிப்படுத்தி இருக்கின்றது. உலகமே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி வேகமாக நகரத் தொடங்கி இருக்கின்ற இந்தவேளையிலேயே, கவாஸாகி நிறுவனம் ஹைட்ரஜன் இரண்டு சக்கர வாகனத்தை வெளியீடு செய்து இருக்கின்றது. நிஞ்சா எச்2 எஸ்எக்ஸ் (Ninja H2 SX) மாடலை தழுவியே தன்னுடைய ஹைட்ரஜன் பவர்டு பைக்கை கவாஸாகி தயார் செய்திருக்கின்றது.
இந்த வாகனத்தையே சமீபத்தில் சுஸுகா சர்க்யூட்டில் வைத்து கவாஸாகி நிறுவனம் சோதனையோட்டம் செய்திருக்கின்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் ஏற்கனவே இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், பைக்குகள் இப்போதே உருவாக்கப்பட்டு வருகின்றன.

கவாஸாகியே இதில் முன்னோடியாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போதைய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நிறுவனம் ஹைட்ரஜன் ஸ்மால் மொபிலிட்டி மற்றும் எஞ்சின் டெக்னாலஜி (Hydrogen Small mobility & Engine technology)-யை உருவாக்கும் பணியில் வெகு நாட்களாகவே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, சென்ற ஆண்டே இதை ஆராய்ச்சி செய்யும் பணியில் கவாஸாகி களமிறங்கியது. இதைத்தொடர்ந்து, ஹைட்ரஜன் பைக்கின் முதல் சோதனையோட்டத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது மேற்கொண்டது. இந்த நிலையிலேயே முதல் முறையாக பொதுப் பார்வைக்கு அந்த வாகனத்தை நிறுவனம் கொண்டு வந்திருக்கின்றது.
இது ஓர் முன்மாதிரி மாடல் மட்டுமே ஆகும். வெகு விரைவில் இதையே நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் விதமாக உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கில் 998 சிசி, இன்லைன், 4 சிலிண்டர், சூப்பர் சார்ஜட் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது.
இதே எஞ்சினையே சில தன்னுடைய முக்கிய தயாரிப்புகளில் கவாஸாகி பயன்படுத்தி வருகின்றது. இதிலேயே பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் வாயிலாக இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கவாஸாகியின் இந்த ஹைட்ரஜன் பைக் சூப்பர் பைக்குகளுக்கு இணையான திறனை வெளியேற்றும் என்பதும் அதில் பொருத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் வாயிலாக சந்தேகத்திற்கு இடமின்றி தெரிய வந்திருக்கின்றது.
அதேநேரத்தில் பெட்ரோல் எஞ்சினைப் போல இது காற்றில் மாசை கலக்காது. அதற்கு பதிலாக இந்த பைக்கில் இருந்து வெறும் நீராவி மட்டுமே வெளியேறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே சுற்றுச் சூழலுக்கு உகந்த பைக்காக இது இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இந்த பைக்கில் ஃப்யூவல் டேங்கிற்கு பதிலாக ஹைட்ரஜனை நிரப்புவதற்கான சிலிண்டரையே கவாஸாகி வழங்கி இருக்கின்றது. கவாஸாகி நிறுவனம் தங்களுடைய இந்த ஹைட்ரஜன் பைக் பெட்ரோல் பைக்குகளுக்கு இணையான இயக்க அனுபவத்தை வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. தொடர்ந்து, இந்த ஹைட்ரஜன் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் 210 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க் வரை வெளியேற்றும் என்றும் தெரிவித்திருக்கின்றது.
இத்தகைய திறன்மிக்க பைக்காகவே ஹைட்ரஜன் பைக்கை கவாஸாகி தயார் செய்து உள்ளது. மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கவாஸாகி நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் பைக்கை 2030 ஆம் ஆண்டு அல்லது அதற்குள்ளாக விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜனில் இயங்கும் பைக்கை கவாஸாகி மட்டுமல்ல இன்னும் சில நிறுவனங்களும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அதேவேளையில், கவாஸாகி நிறுவனம் தன்னுடைய ஹைட்ரஜன் பைக்கை கவாஸாகி, ஹோண்டா, யமஹா, சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்தே உருவாக்கி இருக்கின்றது.
இந்தியாவில் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பைக் விற்பனைக்கு வர மேலும் ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், உலகின் முதல் சிஎன்ஜி பைக் நம் நாட்டிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்தான் அது ஆகும். ரூ. 95 ஆயிரம் என்கிற மிக மிக குறைவான விலையில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








