நம்பவே முடியாத குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கைனடிக் லூனா! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!
இந்திய சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த மொபட்களில் (Moped) ஒன்று கைனடிக் லூனா (Kinetic Luna). அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த மொபட் எலெக்ட்ரிக் (Electric) அவதாரத்தில் தற்போது திரும்பி வந்துள்ளது.
கைனடிக் இ-லூனா (Kinetic E-Luna) என்ற பெயரில் இன்றுதான் (பிப்ரவரி 7) இந்த புதிய மாடல் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டில், 2 kW மோட்டார் (Motor) மற்றும் 2 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 110 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான ரேஞ்ச் (Range) ஆக கருதப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மொபட்டின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஹாலோஜன் பல்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த கால பழைய மாடலை நினைவுபடுத்தும் வகையில் மிகவும் எளிமையாக இந்த எலெக்ட்ரிக் மொபட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மொபட்டில் வழங்கப்பட்டிருப்பது 16 இன்ச் வீல்கள் ஆகும். அதே நேரத்தில் இதன் இருக்கை உயரம் 760 மிமீ ஆக உள்ளது. எனவே அனைவராலும் இதை எளிதாக பயன்படுத்த முடியும்.

மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் மொபட்டின் வீல்பேஸ் நீளம் 1,335 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆகவும் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மொபட்டின் பின் இருக்கையை கழற்றி மாட்டி கொள்ள முடியும். எனவே அவசியம் ஏற்பட்டால், பின் இருக்கையை கழற்றி விட்டு, லக்கேஜ்களை வைத்து கொண்டு செல்ல முடியும்.
இதுதவிர செல்போன் சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்டு எடுக்காவிட்டால் எச்சரிக்கும் சென்சார் மற்றும் அடிப்படையான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகிய வசதிகளும் கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர போர்ட்டபிள் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை முழுமையாக நிரப்ப சுமார் 4 மணி நேரம் வரை ஆகும்.
அதே நேரத்தில் கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்1 மற்றும் எக்ஸ்2 என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants), கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட் கிடைக்கும். இதில், எக்ஸ்1 வேரியண்ட்டின் விலை 69,990 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எக்ஸ்2 வேரியண்ட்டின் விலை 74,990 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. நைட் ஸ்டார் பிளாக், ஸ்பார்க்கிளிங் க்ரீன், பியர்ல் யெல்லோ, ஓஸன் ப்ளூ மற்றும் மல்பெரி ரெட் என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த எலெக்ட்ரிக் மொபட் கிடைக்கும்.
நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது நைட் ஸ்டார் பிளாக் கலர் ஆப்ஷனுக்கான விலை ஆகும். வேறு எந்த கலர் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தாலும், 1,500 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியதிருக்கும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 500 ரூபாயை முன்பணமாக செலுத்தி இந்த எலெக்ட்ரிக் மொபட்டை உடனடியாக முன்பதிவு (Booking) செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒகினவா ட்யூயல் 100 (Okinawa Dual 100), ஒடிசி ட்ராட் (Odysse Trot) மற்றும் கோகோரோ க்ராஸ்ஓவர் (Gogoro Crossover) ஆகிய மாடல்களுடன் கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட் போட்டியிடும். இவை எல்லாம் தவிர டிவிஎஸ் எக்ஸ்எல்100 (TVS XL 100) மொபட்டிற்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.


Click it and Unblock the Notifications








