இவ்ளோ கம்மி விலையில் இவ்ளோ சிறப்பம்சங்களை தாங்கிய இ-ஸ்கூட்டரா.. தனக்குண்டான பிரச்னையை தானே சரி செய்யும்!
முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு விலை குறைவான மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது, கோமகி எலெக்ட்ரிக் (Komaki Electric Vehicle) நிறுவனம். இந்த பிராண்டே தற்போது மீண்டும் ஒரு புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எம்ஜி ப்ரோ (MG PRO), எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பன்முக பேட்ரி பேக் தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ரூ. 53,999 எனும் ஆரம்ப விலையிலேயே எம்ஜி ப்ரோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்ஜி ப்ரோ ஜிஆர், எம்ஜி ப்ரோ எல்ஐ, எம்ஜி ப்ரோ வி மற்றும் எம்ஜி ப்ரோ பிளஸ் ஆகியவையே அவை ஆகும். இதில், முதல் ஒன்றே ரூ. 53,999 என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக் கொண்ட தேர்வாக எம்ஜி ப்ரோ எல்ஐ காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 59,999 ஆகும். தொடர்ந்து, எம்ஜி ப்ரோ வி தேர்விற்கு ரூ. 69,999-ம், எம்ஜி ப்ரோ பிளஸ் தேர்விற்கு ரூ. 74,999-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
விலைக்கு ஏற்ப ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான ரேஞ்சை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கையே இந்த இ-ஸ்கூட்டரில் கோமகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், எம்ஜி ப்ரோ ஜிஆர் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 70 கிமீ ரேஞ்சை வழங்கக் கூடிய 1.6 kW பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், எம்ஜி ப்ரோ எல்ஐ தேர்வில் ஒர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்சை தரக் கூடிய 1.75 kW லிபோ 4 வகை பேட்டரி பேக்கும், எம்ஜி ப்ரோ வி தேர்வில் 100 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கக் கூடிய 2.2 kW லிபோ 4 பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவை மூன்றைக் காட்டிலும் அதிக ரேஞ்சை வழங்கக் கூடியதாக எம்ஜி ப்ரோ பிளஸ் இருக்கின்றது. இதில் 2.7 kW திறன் கொண்ட லிபோ 4 வகை பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 150 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும்.
விலை குறைவான இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் வாரண்டி அல்லது 30 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தையும் அறிவித்து இருக்கின்றது. ஆனால், சார்ஜருக்கு ஓராண்டு மட்டுமே வாரண்டி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஆரம்ப நிலை தேர்வான எம்ஜி ப்ரோ ஜிஆர்-க்கு 1.6 kW ஓராண்டு அல்லது 3 ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நான்கு முதல் 5 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர அட்வான்ஸ்டு சிறப்பம்சங்கள் பல இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தன்னைத் தானே சார்ஜ் செய்துக் கொள்ளும் சுவிட்ச், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், ரிமோட் வாயிலாக லாக் செய்யும் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், பிரச்னைகளை தானே கண்டறியும் வசதி உள்ளிட்டவையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, முன் மற்றும் பின் வீலில் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்கள் பக்கம் கவரும் பொருட்டே கோமகி நிறுவனம் தற்போது விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் எம்ஜி ப்ரோ-வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








