கேடிஎம் பைக்கை வாங்க ஆள் இல்ல!! இந்தியாவில் சேல்ஸ் குறைஞ்சிடுச்சு... முழு விபரம்!
புதியது புதியதாக விலையுயர்ந்த பைக்குகள் வந்தாலும், கேடிஎம் (KTM) பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உள்ளது. அத்தகைய கேடிஎம் பைக்குகளுள் கடந்த பிப்ரவரி மாதத்தில் எவை இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன? 2024 பிப்ரவரியில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகள் எத்தனை? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 2012ஆம் ஆண்டில் 200சிசி பைக்குகள் மூலமாக நுழைந்ததினாலோ என்னவோ இந்தியாவில் 200சிசி கேடிஎம் பைக்குகளே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2024 பிப்ரவரி மாதத்திலும் கேடிஎம் பிராண்டில் இருந்து 200 ட்யூக் மற்றும் 200 ஆர்சி பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 200 ட்யூக் மற்றும் 200 ஆர்சி இரண்டும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 2,598 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் 1,000 யூனிட்களுக்கு மேல் வேறெந்த கேடிஎம் பைக்கும் விற்பனை செய்யப்படவில்லை. இருப்பினும், 2023 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் 200சிசி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் 656 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3,254 கேடிஎம் 200சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 200சிசி பைக்குகளுக்கு அடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகள் 250சிசி பைக்குகள் ஆகும். 250சிசி என்ஜின் உடன் இந்தியாவில் தற்சமயம் 250 ட்யூக் மற்றும் 250 அட்வென்ச்சர் என இரு கேடிஎம் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை இரண்டும் மொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 953 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 1,650 கேடிஎம் 250சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனை ஆனது 697 யூனிட்கள் குறைந்துள்ளது. இவ்வாறு, கேடிஎம் 200 மற்றும் 250 பைக்குகளின் விற்பனை குறைந்து இருப்பினும், கேடிஎம் 390 பைக்குகளின் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 390சிசி கேடிஎம் பைக்குகளின் எண்ணிக்கை 873 ஆகும். ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 629 கேடிஎம் 390 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த மாதத்தில் மொத்தம் 244 கேடிஎம் 390 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம், விற்பனையில் உள்ள கேடிஎம் 390 பைக் மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகும்.

இந்தியாவில் தற்சமயம் 390 ட்யூக், ஆர்சி390, 390 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் என 4 விதமான கேடிஎம் 390சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், 390 அட்வென்ச்சர் எக்ஸ் ஆனது கடந்த ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. கேடிஎம் பிராண்டில் இருந்து இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுபவை என்றால், அவை 125சிசி பைக்குகள் ஆகும்.
ட்யூக் மற்றும் ஆர்சி வெர்சன்களில் விற்பனைக்கு கிடைக்கும் கேடிஎம் 125 பைக்குகள் கடந்த மாதத்தில் 202 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரியில் 310 கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 4,626 கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2023 பிப்ரவரியை காட்டிலும் 1,217 யூனிட்கள் குறைவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கேடிஎம் பைக்குகளாக விளங்கினாலும், கேடிஎம் 125சிசி பைக்குகள் குறைவாக விற்பனையாகுவதற்கு முக்கிய காரணம், அவற்றின் விலை ஆகும். ஏனெனில், இந்தியாவின் விலையுயர்ந்த 125சிசி பைக்காக கேடிஎம் 125சிசி பைக்குகள் விளங்குகின்றன. இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால் புது, புது 200சிசி பைக்குகளை கேடிஎம் நிறுவனம் களமிறக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









