இந்தியாவை கேடிஎம் இந்த அளவுக்கு நம்புகிறதா!! இவ்வளவு அதிக விலையில் பைக்குகளை பார்த்திருக்கவே மாட்டீர்கள்!!
கே.டி.எம் (KTM), உலகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணியில் உள்ளது. அதாவது, இந்தியாவில் கேடிஎம் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் அதன் விலையுயர்ந்த பைக்குகளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இதுகுறித்தும், முன்பதிவுகள் துவங்கப்பட்ட கேடிஎம் பைக்குகள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் முடிந்தவரையில் விலை குறைவான பைக்குகளை தான் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. ஆனால், 125சிசி கேடிஎம் பைக்குகளின் விலைகள் கூட ரூ.2 லட்சம் என்கிற அளவில் உள்ளது. அதேநேரம், விலைமிக்க பைக்குகளையும் ஒருபக்கம் கேடிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர், 1390 சூப்பர் ட்யூக் ஆர், 1390 சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கு முன்னதாக இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் பெங்களூரில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த விலையுயர்ந்த கேடிஎம் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ளன.
கேடிஎம் நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த & பவர்ஃபுல்லான 1390 சூப்பர் ட்யூக் ஆர் மற்றும் 1390 சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகள் மட்டும் தான் புக்கிங்குகள் துவங்கப்படுவதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. அதன்பின், கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக்கிற்கும் முன்பதிவுகள் துவங்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், 990 ட்யூக் பைக்கிற்கும் இந்தியாவில் புக்கிங்குகளை துவங்க கேடிஎம் நிறுவனம் தயாராகி வருகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய கேடிஎம் பைக்குகளை புக் செய்வதற்கான முன்தொகையாக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் வசூலிக்கப்பட உள்ளதாம். முன்பதிவு செய்வதற்கான டோக்கன் தொகையே இத்தனை இலட்சங்கள் என்றால், பைக்கின் விலை எவ்வளவு இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். தற்போது முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதிலேயே விலை குறைவான பைக்கான கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆரின் விலை ரூ.12 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விலையுயர்ந்த பைக்குகளை வருகிற டிசம்பர் மாத துவக்கத்தில் இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம். விலை குறைவான கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டாலும், தற்போது புக்கிங் துவங்கப்பட்டுள்ள விலைமிக்க கேடிஎம் பைக்குகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஆஸ்திரியாவில் இருந்து சிபியூ முறையில் இந்த பைக்குகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இவ்வாறு கொண்டுவருவதால், இறக்குமதி வரி அதிகம் இருக்கும் என்பதால் பைக்கின் விலையும் அதிகமாக இருக்கும். இந்த கேடிஎம் பைக்குகளை இந்தியாவில் புக் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2025 ஜனவரி மாதத்தில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கஸ்டமர்களை சென்றடைய உள்ள பைக்குகளுக்கு தான் முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளன. உங்கள் பகுதியில் இந்த புதிய கேடிஎம் பைக்குகளை புக் செய்தவற்கான புக்கிங் தொகையை பற்றி அறிய அருகில் உள்ள கேடிஎம் டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









