இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் எம்வி அகஸ்டா (MV Agusta). உலகின் தலைசிறந்த மற்றும் அழகிய மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் பிராண்டாக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய நிறுவனத்தின் பெரும் பங்கையே கேடிஎம் (KTM) நிறுவனத்தின் தாய் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேடிஎம்-இன் தாய் நிறுவனம் பைரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) ஆகும். இது ஓர் ஆஸ்ட்ரியா-வைச் சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே, உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான எம்வி அகஸ்டா-வின் 50.1 சதவீத பங்குகளை தற்போது வாங்கி குவித்து இருக்கின்றது.

எனவே தற்போது எம்வி அகஸ்டாவின் நிர்வாக பொறுப்பு கேடிஎம் நிறுவனத்தின் கைகளுக்கு மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எம்வி அகஸ்டாவின் 25.1 சதவீத பங்குகளை கேடிஎம்-இன் தாய் நிறுவனம் கையகப்படுத்தி இருந்தது.
இந்த நிலையிலேயே மேலும் சில பங்குகளையும் அது வாங்கி இருக்கின்றது. பெரும் பங்கினை கையகப்படுத்தியதன் விளைவாக எம்வி அகஸ்டாவின் கொள்முதல் மற்றும் விநியோக சங்கிலி போன்ற முக்கிய பணிகளை கேடிஎம் கண்கானித்து வந்தது. இந்த நிலையிலேயே தற்போது மேலும் சில பங்குகள் வாங்கப்பட்டு இருக்கின்றன.
ஆகையால், தற்போது கூடுதல் பொறுப்பாக எம்வி அகஸ்டா மோட்டார்சைக்கிள்களை தன்னுடைய தொடர்புகள் வாயிலாக பகிர்ந்தளிக்கும் முக்கிய பணிகளும் அதன் கைகளுக்கு மாறி இருக்கின்றது. மேலும், வரும் நாட்களில் மீதமுள்ள பங்குகளையும் கேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் கையகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், 2025 ஆம் ஆண்டிற்குள் எம்வி அகஸ்டா முழுக்க முழுக்க கேடிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானதாக மாறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நிறுவனத்தின் திட்டத்தில் எம்வி அகஸ்டா பைக்குகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதும் உண்டு. நிறுவனத்திற்கு சொந்தமான வரீஸ் ஆலையிலேயே உற்பத்தியை அதிகரிக்கும் பிளானில் கேடிஎம் இருக்கின்றது.
ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்களை அது இங்கு தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எம்வி அகஸ்டா பிராண்டின்கீழ் இப்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ஏழு விதமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரஷ், ப்ரூடல், டிராக்ஸ்டர், டூரிஸ்மோ வெலோஸ், எஃப்3, சூப்பர் வெலோஷ், எல்எக்ஸ்பி ஆகியவையே அவை ஆகும்.
இதுதவிர, நின்று கொண்டே பயணிக்க உதவும் இ-ஸ்கூட்டர் வகை வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் மிதிவண்டி போன்ற வாகனங்களையும் எம்வி அகஸ்டா தயாரித்துக் கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் உற்பத்தியையும், விநியோகத்தையே மிகப் பெரிய அளவில் உயர்த்தும் பிளானில் கேடிஎம் உள்ளது. நிறுவனத்தின் அனைத்து மோட்டர்சைக்கிள்களும் அழகிற்கும் அதிக திறன் வெளிப்பாட்டிற்கும் பெயர்போனவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
கேடிஎம் நிறுவனத்தின் தொடர்பு வலையமைப்பு உலக அளவில் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. நமது இந்தியாவிலும் நிறுவனத்தின் நெட்வொர்க் மிகப் பெரிய அளவில் உள்ளது. இதைவைத்தே நிறுவனம் எம்வி அக்ஸாடவின் சந்தையை பலமடங்கு பெரிதாக்க திட்டமிட்டு இருக்கின்றது. எம்வி அகஸ்டா நிர்வாகம் மிகப் பெரிய நிதி பிரச்னையில் சிக்கி தவித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அதன் பெரும் பங்குகள் கேடிஎம் நிறுவனத்தின் கைகளுக்கு மாற்றப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சூப்பர் மற்றும் பிரீமியம் தர பைக்குகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இப்போது இந்த பிரிவு நல்ல வேகத்தில் வளர தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலே உலக அளவில் நிலவுகின்றது. இந்த நிலையிலேயே எம்வி அகஸ்டாவின் பெரும் பங்கை தனக்காக்கி இருக்கின்றது கேடிஎம். இந்த பிராண்ட் வாயிலாக விரைவில் அது இரண்டு சக்கர வாகன உலகில் அது புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








