கார்களை போல ஏஎம்டி கியர்பாக்ஸை பைக்குகளுக்கு தயார் செய்த கேடிஎம்.. கிளட்ச் இருக்காது! வரும் 8ஆம் தேதி அறிமுகம்
கார் (Car)-களில் வழங்கப்படுவதைப் போல ஏஎம்டி கியர்பாக்ஸ் (AMT Gearbox)-ஐ பிரபல பைக் (Bike) உற்பத்தி நிறுவனமான கேடிஎம் (KTM), அதன் தயாரிப்புகளில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த நிறுவனம் அது உருவாக்கி இருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸை சீக்கிரமே அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் 8ஆம் தேதி அன்றே அந்த ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Automated Manual Transmission) அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
உலக புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான கேடிஎம், அடுத்து வரும் வாரங்களில் புதுமுக இரண்டு சக்கர வாகன மாடல்களை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே, சுவாரஷ்யமாக, கேடிஎம் நிறுவனம் அதன் புதிய தொழில்நுட்ப வசதிக் கொண்ட கியர்பாக்ஸையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேடிஎம் நிறுவனம் இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அம்சம் கொண்ட அட்வென்சர் பைக்கின் புரோட்டோடாப் வெர்ஷனை சோதனையோட்டம் செய்யும் டீசர் வீடியோவை வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான பணியிலும் அது களமிறங்கியிருக்கின்றது.
எனவே சீக்கிரமே கேடிஎம்-இன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பைக் இந்த உலகில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டீசரானது புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் எப்படி செயல்படும் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இருக்கின்றது. குறிப்பாக, அந்த டீசரில் இடம் பெற்றிருக்கும் பைக்கில் கிளட்ச் லிவர் இல்லாமல் இருப்பதைக் காண முடிகின்றது.
அதேவேளையில், வலது பக்கம் கியர் ஷிஃப்ட் இருப்பதை அந்த டீசர் வீடியோ வெளிக்காட்டுகின்றது. இந்த அம்சத்தையே அதிகாரப்பூர்வமாக கேடிஎம் நிறுவனம் வருகின்ற செவ்வாய் கிழமை அன்று வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த கியர்பாக்ஸ் கொண்ட டூ-வீலர் தனித்துவமான ரைடு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், கேடிஎம் மட்டுமல்ல வேறு சில இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த அம்சத்தை அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹோண்டாவும்கூட இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இரண்டு சக்கர வாகன இயக்கத்தை எளிதாக்கும் பொருட்டு ஹோண்டா நிறுவனம் அதன் தானியங்கி கிளட்ச் சிஸ்டத்தை தயார் செய்திருக்கின்றது.
அதற்கு இ-கிளட்ச் (e-Clutch) என அது பெயர் சூட்டி இருக்கின்றது. இந்த கருவி கிளட்ச்சின் பயன்பாடு இல்லாமலேயே கியரை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும். இதுவே அதன் முக்கிய பணியும் ஆகும். இதனால்தான் இந்த கியர்பாக்ஸ் கொண்ட டூ-வீலரில் தனித்துவமான ரைடு அனுபவம் நிச்சயம் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
கிளட்ச் உள்ள டூ-வீலரில் ஒவ்வொரு முறையும் கியரை மாற்றும் போதும் கிளட்ச்சைப் பிடித்து பின்னர், கியரை அதிகரிக்க அல்லது குறைக்க செய்ய வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் கியர்பாக்ஸ் அடிவாங்கும். காலப்போக்கில் அந்த கியர்பாக்ஸ் வேலை செய்யாமல் போவதற்கான சூழலும் ஏற்படும்.
அதேவேளையில், நெரிசல் மிகுந்த சாலையில் தொடர்ச்சியாக இந்த செயலைச் செய்வது என்பது சோர்வை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதில் இருந்தே விடிவு காலம் பிறக்க இருக்கின்றது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, கிளட்ச் லிவரை பிடித்து கியரை மாற்றுவதில் இருந்து விடுதலையை தர இருக்கின்றது கேடிஎம் தயாரிக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸும், ஹோண்டா தயாரிக்கும் இ-கிளட்ச்-ம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்க புதிய ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், எந்த பைக் மாடலில் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








