கேடிஎம்-இன் பைக்குகளுக்கான ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தயார்.. டென்ஷன் இல்லாம பைக்குகளை ஓட்டலாம்!
பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் (KTM) அதிகாரப்பூர்வமாக ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸை வெளியீடு செய்திருக்கின்றது. நீங்கள் படித்தது சரிதான். கேடிஎம் பைக்குகளுக்கான ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Automated Manual Transmission)-னையே தயார் செய்திருக்கின்றது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிக சிறந்த ரைடு அனுபவத்தைப் பெற இந்த டிரான்ஸ்மிஷன் பெரும் உதவியாக இருக்கும் நம்பப்படுகின்றது. டிராஃபிக் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான கியர்களைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குவது என்பது பெரும் சவாலானதாக உள்ளது.
குறிப்பாக, சோர்வை வழங்கக் கூடியதாக அது இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற ஓர் கியர்பாக்ஸ் அம்சத்தை கேடிஎம் தன்னுடைய பைக்கிலும் வழங்குவதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. முதல் கட்டமாக அது, அதன் புகழ்பெற்ற பைக் மாடலான 1390 சூப்பர் அட்வென்சர் ஆர் புரோட்டோடைப் (1390 Super Adventure R prototype) மாடலிலேயே வழங்கி இருக்கின்றது.

கேடிஎம் நிறுவனம் அதன் ஏஎம்டி அமைப்பை மையவிலக்கு கிளட்ச் அமைப்பைச் சுற்றியே கட்டமைத்து உள்ளது. இது வழக்கமான ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்-இல் மாறுபட்ட ஓர் அமைப்பாகும். மேலும், இதன் கிளட்ச் குறைவான வேகத்திலும் சிறந்து செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
பொதுவாக கியர் உள்ள பைக்குகளில் குறைவான வேகத்தில் செல்லும்போது கிளட்ச்சைப் பிடிக்கவில்லை என்றால் அது அது தடைப்பட்டு தடைப்பட்டு பயணிக்கும். அத்துடன், திடீரென எஞ்சினை ஆஃப்பாகவும் ஆக்கிவிடும். ஆனால், இந்த நிலை கேடிஎம்-இன் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸில் ஏற்படாது. எனவே நகர்ப்புறப் பயணம் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்கள் என எதுவாக இருந்தாலும் சிறப்பானதாக இருக்கும்.
மேலும், கியர்ஷிஃப்ட்டுகள் இசியூ மற்றும் டிரான்ஸ்மிஷன் கன்ட்ரோல் யூனிட் வாயிலாகவே நிர்வாகிக்கப்படுகின்றன. இதுவே விரைவான கியர் மாற்றங்களை தடையில்லாமல் வேகத்திற்கு ஏற்ப வழங்கும். அதாவது, மனித தலையீடு இன்றி எலெக்ட்ரோ மெக்கானிக்கலாக இது கியர்களை வேகத்திற்கு மாற்றும். சொல்லப்போனால் நம்மைவிட மிக சிறப்பாகவே இது கியரை மாற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
கேடிஎம் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் வெறும் 50 மில்லி செகண்டுகளிலேயே கியர்ஷிஃப்ட்டை செய்துவிடும். மேலும், உயர் வகை செயல்திறனையும் இது வெளிப்படுத்தச் செய்யும். அதேவேளையில், கேடிஎம் இந்த ஏஎம்டி-யை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் என இரண்டாகவும் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திருக்கின்றது.
எனவே சௌகரியத்திற்கு அதை ரைடர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். பேடில் ஷிஃப்ட் அல்லது ஃபூட் கியர் லிவர் வாயிலாக இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். கேடிஎம் நிறுவனம் ஏஎம்டி கியர் வசதியுடன் சேர்த்து மூன்று விதமான ரைடிங் மோட்களையும் வழங்கி இருக்கின்றது.
கம்ஃபோர்ட் (Comfort), ஸ்ட்ரீட் (Street) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகியவையே அவை ஆகும். இந்த ஒவ்வொரு மோடும் வெவ்வேறு விதமான இயக்க அனுபவத்தை ரைடருக்கு வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, புதிதாக பார்க் கியர் எனும் அம்சத்தையும் கேடிஎம் வழங்கி இருக்கின்றது.
வழக்கமாக ஆறு அல்லது ஐந்து கியர்ஷிஃப்ட்டுகளைக் கொண்ட பைக்குகளில் 1-நியூட்டரல்-2-3-4-5 மற்றும் ஆறு அப்படியே கியர்கள் இருக்கும். ஆனால், கேடிஎம் தயார் செய்திருக்கும் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் பார்க்கிங், நியூட்ரல், 1,2,3,4,5 மற்றும் ஆறு என இருக்கும். இதில் பார்க் கியரை ஆக்டிவேட் செய்யும்போது அது பின் வீலை லாக் செய்யும் விதமாக செயல்படும்.
ஆகையால், வாகனம் முன்னேறி போகாது. இத்தகைய தரமான புதிய தொழில்நுட்பத்தையே கேடிஎம் நிறுவனம் தயார் செய்து இரண்டு சக்கர வாகன உலகை ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. விரைவிலேயே இந்த அம்சம் கொண்ட கேடிஎம் டூ-வீலர் உலக சந்தையில் விற்பனைக்கு வந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனம் மட்டுமல்ல பிஎம்டபிள்யூ மோட்டாராட் மற்றும் ஹோண்டா போன்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் டூ-வீலர்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இவர்களும் எப்போது தங்களின் டூ-வீலர்களில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக் கொண்டு வருவார்கள் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








