கார் தயாரிப்பு நிறுவனம் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்க போகுதா! நம்ம டாடாவா இருக்குமோ.. இல்ல மாருதியா இருக்குமோ!
கார்களை தயாரித்து வரும் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்த நிறுவனம்? மின்சார இரண்டு சக்கர வானக தயாரிப்பில் களமிறங்க அது திட்டமிடுவதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மினி (Mini). இந்த நிறுவனமே எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் (Electric Two Wheeler) உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Source: autoexpress இந்த நிலையிலேயே மினி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையிலும் களமிறங்கும் பிளானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகளைத் தொடங்கிவிட்டது. இதன் மின்சார கார்களுக்கு எலெக்ட்ரிக் கார் காதலர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதே வரவேற்பை இரண்டு சக்கர வாகனத்தின் பக்கமும் ஈர்க்கும் பொருட்டு, அந்நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் பிரிவில் களமிறங்க உள்ளது. சமீபத்தில் மினி நிறுவனத்தின் தலைவர் ஸ்டெஃபனி வர்ஸ்ட், பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி பார்த்திருக்கின்றார். அந்த வாகனம் அவரின் கவனத்தையும், மனதையும் வெகுவாக கவர்ந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே அவருக்கு மினி பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் டூ-வீலரை உற்பத்தி செய்யும் எண்ணம் வந்திருக்கின்றது. ஆமாங்க, பிஎம்டபிள்யூ சிஇ02-வே மினி பிராண்டை எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான எண்ணத்தைத் தூண்டி இருக்கின்றது. மினி பிராண்டின் தாய் நிறுவனமே பிஎம்டபிள்யூ என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமே பிஎம்டபிள்யூ மோட்டாராட் ஆகும். பிஎம்டபிள்யூ மோட்டாராட் கீழ் சிஇ02 (CE02), சிஇ04 (CE04) ஆகிய எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதிலேயே சிஇ02 மாடலை மினி நிறுவனத்தின் தலைவர் ஓட்டி பார்த்திருக்கின்றார். இது ஓர் எலெக்ட்ரிக் மொபட் ஆகும்.
11 kW மின் மோட்டார் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் மணிக்கு அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3 விநாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் மணிக்கு 50 கிமீ வேகத்தை இந்த எலெக்ட்ரிக் வாகனம் தொட்டுவிடும்.
இத்தகைய ஆற்றல் மிகுந்த வாகனமே இந்த இ-வாகனம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் மொபட்டில் ஓர் முழுமையான சார்ஜில் சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எல்இடி மின் விளக்கு, இணைப்பு வசதி, நேவிகேஷன், டிஜிட்டல் திரை என ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை இந்த வாகனத்தில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்கி இருக்கின்றது.
மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு சிஇ02 எலெக்ட்ரிக் மொபட்டில் ஷாக்அப்சார்பர் (பின் பக்கத்தில்) மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் (முன் பக்கத்தில்) வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ரிஜெனரேஷன் பிரேக்கிங் வசதியும் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றது.
குறிப்பாக, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் மொபட்டை தயார் செய்திருக்கின்றது. இதனாலேயே மினி நிறுவனத்தின் தலைவர் அந்த வாகனத்தின் வசம் கவர்ந்திருக்கின்றார். எனவே விரைவில் இதேமாதிரியான தனித்துவமான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலரை அவர் விற்பனைக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே முன்னணி பிராண்டுகள் மற்றும் புதுமுக நிறுவனங்கள் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர். இவர்களின் வரிசையிலேயே விரைவில் மினி இணைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








