71,000 ரூபாக்கு விற்ற பைக் இப்ப 1.50 லட்சத்துக்கு விக்குது! இதுக்கு யாரு காரணம்? உண்மையை உடைத்த பஜாஜ் எம்டி!
பட்ஜெட் அல்லது மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்க வேண்டிய வாகனங்கள் இந்தியாவில் அதிக விலையில் விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய தகவலை பஜாஜ் நிறுவனத்தின் எம்டி ராஜீவ் பஜாஜ் பகிர்ந்திருக்கின்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நேற்றைய (மே 3) தினம் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பல்சர் என்எஸ் 400 இசட் (Pulsar NS400 Z) மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே பல்சர் வரிசையில் அதிக திறனை வெளியேற்றும் பல்சர் பைக் மாடல் ஆகும்.

125 சிசி முதல் 250 சிசி திறன் கொண்டதாக மட்டுமே பல்சர் பைக்குகள் விற்பனைக்குக் கிடைத்து வந்தன. இந்த நிலையிலேயே முதல் முறையாக பல்சர் தொடரில் 373 சிசி திறன் கொண்ட பல்சர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் அறிமுகத்தைத்தொடர்ந்து சில முக்கிய தகவல்களை ராஜீவ் பஜாஜ் பகிர்ந்துக் கொண்டார்.
நிறுவனம் விரைவில் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் மாடலை (CNG Bike) விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது பற்றிய விபரங்களைப் பகிர்ந்துக் கொண்டார். வரும் ஜூன் 18 ஆம் தேதி பஜாஜ் அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்தே, இந்தியாவில் மலிவு விலையில் விற்கப்பட வேண்டிய வாகனங்கள் சில ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது என்பதற்கான காரணத்தையும் அவர் கூறினார். பாதுகாப்பு மற்றும் கடுமையான மாசு உமிழ்வு விதிகளே மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்க வேண்டிய இரண்டு சக்கர வாகனங்களை அதிக விலையில் விற்பனைச் செய்ய வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இத்துடன், ஆரம்ப நிலை வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை அரசு குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்தார். இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ்-ஸையும், சுற்றுச் சூழலைப் பாதுக்க வேண்டி பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு விதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த இரண்டின் காரணமாகவே இந்தியாவில் ஆரம்ப நிலை வாகனங்கள்கூட தற்போது மிக உயரிய விலையில் விற்கப்படுகின்றன. முன்னதாக 71 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பல்சர் 150 தற்போது ரூ. 1.50 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இந்த அதீத விலை உயர்விற்கு மிக முக்கியமான காரணமே பிஎஸ்6-ம், ஏபிஎஸ் கட்டாயமும் தான் என ராஜீவ் பஜாஜ் கூறி இருக்கின்றார்.
இதனால்தான் தற்போது ஏழைகளும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஜிஎஸ்டி வரியை ஆரம்ப நிலை வாகனங்களுக்கு குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில், பாதுகாப்பு விதியையும், மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு விதியையும் தான் குறை கூறவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அவர், இந்த இரண்டும் அவசியமானது.
ஆனால், வரியைதான் தாங்கள் குறைக்க கேட்கின்றோம் என்றும் கூறினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்ட அவர், பிரேசில், லத்தீன் அமெரிக்கா போன்ர நாடுகளில் 8 முதல் 14 சதவீதமே வரி விதிக்கப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதை 18 சதவீதமாக குறைக்கவே அவர் தற்போது கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஆரம்ப நிலை வாகனங்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் வரை குறைக்கும் எனில் இப்போது விற்கப்படுவதைக் காட்டிலும் பலமடங்கு குறைவான விலையில் இரண்டு சக்கர வாகனங்கள் சில விற்பனைக்குக் கிடைக்கின்ற சூழல் உருவாகும். அப்படி உருவாகினால் ஏழைகளாலும் புதிய வாகனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








