ஆக்டிவாவைபோல ஃபுல் மெட்டல் பாடியில் இ-பைக் அறிமுகம்.. இதோட விலையை கேட்டீங்க ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க!
இந்தியாவில் மெட்டால் பாடி உடன் குறிப்பிட்ட சில டூ-வீலர் மாடல்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், மெட்டல் பாடி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் பிரபலமான டூ-வீலர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) இருக்கின்றது. இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைப்பதற்கு அது மெட்டல் பாடி (Metal Body)-யைக் கொண்டிருப்பதும் ஓர் முக்கிய காரணமாகும்.
இதனாலேயே பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் புதிய பைக் ஒன்றை ஃபைபர் பேனல்களுக்கு பதிலாக மெட்டல் பாடிக் கொண்டதாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அது என்ன மாடல்? அதன் விலை எவ்வளவு? மேலும், அதன் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்-எக்ஸ்-மோட்டோ (mXmoto) எனும் நிறுவனமே முழு மெட்டல் பாடிக் கொண்ட டூ-வீலரை இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எம்16 (M16) எலெக்ட்ரிக் பைக்கையே அது மெட்டல் பாடியுடன் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.98 லட்சம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மெட்டல் பாடியை இந்த எலெக்ட்ரிக் பைக் கொண்டிருப்பதனால், அது பல ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கேற்பவே 8 ஆண்டுகள் வாரண்டியை பேட்டரி பேக்கிற்கு 80 ஆயிரம் கிமீ தடையில்லா ரைடிங்கிற்கும், 3 ஆண்டுகள் வாரண்டி மோட்டார் மற்றும் கன்ட்ரோல்லர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்தைகய நீண்ட கால வாரண்டி மக்கள் மத்தியில் எம்-எக்ஸ்-மோட்டோவின் எம்16 எலெக்ட்ரிக் பைக்கின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஓர் முழு சார்ஜில் 160 கிமீ தொடங்கி 220 கிமீ வரையில் பயணித்துக் கொள்ள முடியும்.
மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 1.6 யூனிட்டுகளே மின்சாரம் தேவைப்படும் என கூறப்படுகின்றது. அப்படி என்றால் இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்யவே ரூ. 7.50 மட்டுமே ஆகும். அப்படி என்றால் ஒரு கிமீ இந்த பைக்கில் பயணிக்க பத்து பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும் என தெரிகின்றது.

எனவே அதிக லாபகரமான எலெக்ட்ரிக் டூ-வீலராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்16 ஓர் க்ரூஸர் ரக பைக்காகும். பஜாஜ் அவென்ஜர் போன்றே இது காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த பைக்கில் 17 அங்குல பெரிய வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
உயர் செயல் திறனை வெளியேற்றவே இந்த பெரிய வீல் எம்16 இ-பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இதை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே வைத்து எம்-எக்ஸ்-மோட்டோ தயாரித்து இருக்கின்றது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் மிக சிறந்த ஆக்சலரேஷனை வழங்கக் கூடியதாக உள்ளது.
இதில் 4000 வாட் திறன் கொண்ட பிஎல்டிசி ஹப் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த அதிக டார்க் திறனுக்கு சி35 மேக்னட்டே காரணமாக உள்ளது. மேலும், இந்த வாகனத்தால் மிகவும் உயரமான மலை பாதையைக் கூட சமாளிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன், 80 ஆம்ப் உயர் எஃபீசியன்ஸி கொண்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது இயக்கத்தின்போது ஏற்படும் மின்சார இழப்பை மீளுருவாக்கம் பெற உதவியாக இருக்கும். எலெக்ட்ரிக் பைக்கின் பாடி மட்டுமல்ல சேஸிஸ்கூட நீடித்து உழைக்கும் மெட்டலாலேயே தயார் செய்யப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் வகையிலும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை எம்-எக்ஸ்-மோட்டோ வடிவமைத்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அதிக மிருதுவான இருக்கைகள் மற்றும் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷனே பைக்கின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சென்ட்ரல் ஷாக் அப்சார்பர் ஆகும்.
ரேசிங் பைக்குகளிலும் இதே மாதிரியான சஸ்பென்ஷனே பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஹெட்லைட் ஆட்டோமேட்டிக் ஆன் மற்றும் ஆஃப் ஆகும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டுகளும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இன்டிகேட்டர் லைட்டுகளும் எல்இடி தர விளக்குகளே ஆகும்.
இத்துடன், டிஎஃப்டி திரை ஒன்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. நேவிகேஷன், அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மற்றும் ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட சிறப்புகளைத் தாங்கியே இந்த திரை ஆகும். மேலும், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட், ஆன்டி ஸ்கிட் /ஹில் அசிஸ்ட் மற்றும் பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் இரட்டை டிஸ்க்கும், பின் பக்கத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறந்த பிரேக்கிங்கை நமக்கு வழங்கும். இரண்டு விதமான வண்ண தேர்வே இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது. மெட்டால் ஸ்ட்ராங் மற்றும் ரோடு டஃப் ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆக்டிவாவிற்கு நல்ல வரவேற்புக் கிடைப்பதற்கு காரணமாக இருப்பவற்றில் அதன் மெட்டல் பாடி அம்சமும் ஒன்றாகும். இந்த யுக்தியையே மற்ற நிறுவனங்களும் தற்போது கையாளத் தொடங்கி இருக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே எம்-எக்ஸ்-மோட்டோ எ16 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









