புதுசா பைக் வாங்குற பிளான்ல இருக்கீங்களா! புதுமுக இ-பைக் சீக்கிரமே விற்பனைக்கு வரபோகுது! கம்மி விலையில வரபோது
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா இவி (Okaya EV)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் வெகு விரைவில் ஓர் புதிய எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது.
அந்த எலெக்ட்ரிக் பைக் ஃபெர்ரடோ (Ferrato) எனும் புதிய பிராண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனை நிறுவனமும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த இ-பைக் டிஸ்ரப்டர் (Disruptor) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும். இதனை ஒகாயா அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த டீசரைப் போலவே முன்னதாகவும் இதே நிறுவனம் ஓர் டீசரை வெளியிட்டு இருந்தது. அந்த டீசரின் வாயிலாக ஒகாயா இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகளையும், ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையிலேயே நிறுவனம் டிஸ்ரப்டர் எலெக்ட்ரிக் பைக்கின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரத்தை அது அறிவிக்கவில்லை.
இந்த நிலையிலேயே இந்த பைக்கின் பக்கம் இப்போதே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, அதில் இடம் பெற சில முக்கிய சிறப்புகள் பற்றிய விபரத்தை ஒகாயா இவி வெளியிட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த பைக்கில் 6.4 kW பிஎம்எஸ்எம் மோட்டார் இடம் பெற இருப்பதை நிறுவனம் இப்போதே உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இது ஓர் அதி வேக திறனை வழங்கக் கூடிய மோட்டார் ஆகும். 228 என்எம் டார்க் வரை வெளியேற்றுமாம். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ என கூறப்படுகின்றது. எனவே இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அல்ட்ராவைலட் நிறுவனத்தின் எஃப்77 இ-பைக்கிற்கு போட்டியாக அமையும். ஆனால், இந்த பைக் ஃபெர்ரடோவைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.
எஃப் 77 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகும். இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் கொண்ட இ-பைக்கிற்கு போட்டியாகவே ஃபெர்ரடோ விற்பனைக்கு வர இருக்கின்றது.
இதன் வருகை எஃப்77க்கு மட்டுமல்ல ஓலா விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இ-பைக்கிற்கும் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒகாயா இவி நிறுவனம் தன்னுடைய பிரீமியம் பிராண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களையே ஃபெர்ரடோவில் விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது. நிறுவனம் இந்த பிராண்ட் பெயரில் 100க்கும் மேற்பட்ட ஷோரூம்களை உருவாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதில் ஒரு சில விற்பனை செயல்பாட்டிற்கு வெகு விரைவில் தயாராகிவிடும் என தெரிகின்றது. தற்போது ஒகாயா நிறுவனம் இந்தியாவில் அதன் தயாரிப்புகளை (மின்சார வாகனங்களை) சலுகை விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சலுகைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரூ. 1,50,112க்கு விற்கப்பட்ட ஃபாஸ்ட் எஃப்4 (Faast F4) தற்போது ரூ. 1,19,989க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், 1,34,946 ரூபாயாக இருந்த ஃபாஸ்ட் எஃப்3 (Faast F3) மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை 1,09,990 ரூபாயாகவும், 93,999 ரூபாயாக இருந்த ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) மாடலின் விலையை ரூ. 79,950 ஆகவும் ஒகாயா இவி குறைத்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக,, ஃபாஸ்ட் எஃப்2பி (Faast F2B) மாடலின் விலையை 1,09,233 ரூபாயில் இருந்து 89,950 ரூபாயாகவும், ஃபாஸ்ட் எஃப்2டி (Faast F2T) மாடலின் விலையை 1,05,092 ரூபாயில் இருந்து 92,900 ரூபாயாகவும் ஒகாயா குறைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க நிறுவனத்தின் குறைவான வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஃப்ரீடம் (Freedom)த்தின் விலையையும் ஒகாயா குறைத்திருக்கின்றது.
75,899 ரூபாயா இருந்த இதன் விலை தற்போது ரூ. 69,950 ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மோட்டோஃபாஸ்ட் (MotoFaast) மாடலின் விலையில் ரூ. 25 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது அதன் விலை தற்போது 1,24,999 ரூபாயாக குறைந்திருக்கின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாகவே தன்னுடைய தயாரிப்புகளின் விலையை மிகப் பெரிய அளவில் ஒகாயா குறைத்திருக்கின்றது. அதேவேளையில், இந்திய பைக் பிரியர்களைக் கவரும் பொருட்டு தற்போது இ-பைக்கையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் விலை மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








