8 வருஷத்துக்கு வாரண்டியா!.. போட்டியாளர்களை அடிச்சு விரட்ட ஓலா கையில் எடுத்திருக்கும் செம்ம பிளான்!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், தங்கள் நிறுவனம் புதிய தயாரிப்புகள் சிலவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், பவிஷ் அகர்வாலின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக, ஓலா அதன் வரும்கால செயல்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றிய திட்டங்களை வெளியிட்டு இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன உலகின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே இருக்கின்றது. இந்த நிலையைத் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அது செயல்படுத்தி வருகின்றது. புதிய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவது தொடங்கி, தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவற்றை அது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனம் சேவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. நிறுவனம் அடுத்த சில மாதங்களில் சர்வீஸ் மையங்கள் மற்றும் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை பலமடங்காக அதிகப்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு வாரண்டியையும் அதிகப்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் ஓலா நிறுவனத்தின் கீழ் 400 சர்வீஸ் மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதேபோல் 1000 மின்சார சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையையே அதிகப்படுத்த இருப்பதாக ஓலா தெரிவித்து இருக்கின்றது. அதாவது, சர்வீஸ் மையத்தை 50 மடங்கு அதிகப்படுத்தவும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாகவும் அதிகரிக்கவே அது திட்டமிட்டு இருக்கின்றது.

மேலும், அடுத்த காலாண்டிற்குள் ஹைப்பர்சார்ஜர் மையங்களின் எண்ணிக்கை 9 மடங்காக அதிகப்படுத்தவும் அது பிளான் போட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும். இத்துடன் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 எக்ஸ் 4kWh பேட்டரி பேக் கொண்ட தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதற்கு அறிமுகமாக ரூ. 1.10 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. முன்னதாக 2 kWh மற்றும் 3 kWh பேட்டரி பேக் தேர்வுகளில் மட்டுமே இந்த மாடல் விற்பனைக்குக் கிடைத்து வந்த நிலையில் தற்போது புதிதாக 4kWh பேட்டரி பேக் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதில் ஓர் முழு சார்ஜில் 190 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என ஓலா தெரிவித்து இருக்கின்றது. எஸ்1 ப்ரோ ஜென்2-வைக் காட்டிலும் வெறும் 5 கிமீ மட்டுமே குறைவான ரேஞ்ஜ் திறன் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய தேர்வின் அறிமுகத்தால் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களின் வரிசை எண்ணிக்கை தற்போது ஆறாக உயர்ந்திருக்கின்றது.
மேலும், தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூ. 79,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதிகபட்ச விலை ரூ. 1.47 லட்சம் ஆகும். இருப்பதிலேயே விலை குறைவான தேர்வாக ஓலா எஸ்1 எக்ஸ் 2 kWh இருக்கின்றது. அதிக விலையைக் கொண்டதாக ஓலா எஸ்1 ப்ரோ இருக்கின்றது.

நிறுவனம் தன்னுடைய மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் பக்கம் இந்தியர்களை ஈர்க்கும் பொருட்டு 8 ஆண்டுகள் / 80 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதுதவிர கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தையும் ஓலா அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
இதன்படி 1 லட்சம் கிமீட்டராக உயர்த்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரூ. 4,999 கூடுதல் கட்டணத்தின் கீழும், 1.25 லட்சம் கிமீட்டராக அதிகரிக்க நினைப்பவர்களுக்கு 13,999 கட்டணத்தின்கீழும் வாரண்டி உயர்த்தி வழங்கப்படுகின்றது. இதுதவிர, மற்றுமொரு சிறப்பு தகவலாக ஓலா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக்கையும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று அது வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த தகவல் இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மின்சார ஸ்கூட்டரை போலவே ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கும் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









