'முதல் இடம்' என்கிற போதையை இழக்க மனசு வராமல் நவம்பருக்கும் ஆஃபரை அறிவித்த ஓலா..
விழாக் காலத்தை முன்னிட்டு சென்ற அக்டோபர் மாதத்தில் வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை மழையைபோல பொழிந்தனர். இதன் விளைவாக கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் வாகன விற்பனை மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காணப்பட்டது. அந்தவகையில், விழாக் காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கி, அதன் வாயிலாக வாடிக்கையாளர்களை மிக அதிக அளவில் சுண்டியிழுத்த நிறுவனங்களில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது மீண்டும் சிறப்பு சலுகையை வழங்கி ஒட்டுமொத்த வாகன உலகையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றது.
நவம்பர் மாதத்திற்கான இந்த சலுகையை 'பாஸ் ஆஃப் ஆல் சேவிங்ஸ்' (BOSS of All Savings) என்கிற பெயரில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. பிக்கஸ்ட் ஓலா சீசன் சேல் (Biggest Ola Season Sale) என்பதன் சுருக்கமே பாஸ் ஆகும்.

இந்த திட்டம் ஓலா எஸ்1 (Ola S1) வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த திட்டத்தின்கீழ் ரூ. 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடியையே ஓலா எலெக்ட்ரிக் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தினால் ஆண்டு ஒன்றிற்கு ரூ. 30 ஆயிரம் வரையில் சேமிக்க முடியும் என்றும் ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது. பெட்ரோல் டூ-வீலர்களுடனான பராமரிப்பு மற்றும் பெட்ரோல் செலவுடன் ஒப்பிட்டே இந்த சேமிப்பு பற்றிய தகவலை அது தெரிவித்திருக்கின்றது.

இதுதவிர, எலெக்ட்ரிக் வாகனங்களை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது என்பது பற்றிய பாடத்தையும் பிரத்யேக ஸ்டோர்கள் வாயிலாக கற்பிக்க இருப்பதாகவும் ஓலா தெரிவித்திருக்கின்றது. ஓலா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ் 2 kWh (Ola S1 X 2kWh) பேட்டரி பேக் தேர்வு இருக்கின்றது.
இதை தினசரி 30 கிமீ என பயன்படுத்தி வந்தாலே ரூ. 31 ஆயிரம் வரை ஆண்டிற்கு மிச்சப்படுத்த முடியும் என்கிற உதாரணத்தையும் ஓலா எலெக்ட்ரிக் கூறியிருக்கின்றது. எனவே அடுத்து வரும் நாட்களிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இரட்டிப்பான விற்பனை வளர்ச்சியையேப் பெறும் என நம்பப்படுகின்றது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. வாஹன் தளத்தில் வெளியாகி இருக்கும் தரவுகளின்படி சுமார் 41,605 யூனிட்டு ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகி இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதை மேலும் இரட்டிப்பாக்கும் முயற்சியிலேயே ஓலா எலெக்ட்ரிக் தற்போது மும்பரமாக இறங்கி இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே விழாக்கள் முடிந்த பின்னரும், நடப்பு நவம்பர் மாதத்திற்கும் சிறப்பு சலுகையை அது அறிவித்திருக்கின்றது. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமல்ல எலெக்ட்ரிக் பைக்குகளையும் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது.
ரோட்ஸ்டர் எனும் இ-பைக்கையே அது விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இது மூன்று விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகும். இதில், ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலை 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh ஆகிய மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், ரோட்ஸ்டர் மாடலிலும் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 3.5 kWh, 4.5 kWh மற்றும் 6 kWh ஆகியவையே அவை ஆகும். தொடர்ந்து ரோட்ஸ்டர் ப்ரோ மாடலில் 8 kWh மற்றும் 16 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தை இழக்க மனமின்றியும், கடந்த தீபாவளியின் போது வாகனத்தை வாங்க முடியாதவர்கள் இந்த நவம்பர் மாதத்தில் பயன் பெறும் பொருட்டும் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை ஓலா நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஆகையால், நவம்பர் மாதத்திலும் இரட்டிப்பான விற்பனை வளர்ச்சியையே ஓலா பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








