ஓலாவை தோற்கடிக்க நெனைச்சவங்க மூட்டையை கட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான்! நாடு முழுக்க இப்போ ஒரே பேச்சு!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்வதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பல நிறுவனங்கள் பல வருடங்களாக ஈடுப்பட்டுவரும் சூழலில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மட்டும் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதற்கு சாட்சியாக, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கிலான புதிய டீலர்ஷிப் ஷோரூம்களை (Dealership Showrooms) ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் இருந்து பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்றாகவே ஓலா எலக்ட்ரிக் கடந்த 2021ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டினுள் நுழைந்தது. இந்த வகையில் பார்த்தால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்து வெறும் 3 வருடங்கள் மட்டும்தான் ஆகிறது.

ஆனால், அதற்குள்ளாகவே மாதத்திற்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் வளர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், கிறித்துமஸ் (Christmas) பண்டிகை தினமான இந்த நன்னாளில் சுமார் 3,200 புதிய ஷோரூம்களை நாடு முழுவதும் ஓலா எலக்ட்ரிக் திறந்துள்ளது.
டிசம்பர் 25ஆம் தேதி ஆயிரக்கணக்கிலான ஷோரூம்களை ஒரே நாளில் திறக்க உள்ளதாக ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் (Bhavish Agarwal) தெரிவித்து இருந்தார். அதன்படி, 3,200 புதிய ஓலா ஷோரூம்கள் நாட்டின் பல பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மொத்த டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திடம் வெறும் 800 ஷோரூம்கள் மட்டும் இருந்தன. புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "என்ன ஒரு எனர்ஜி, என்ன ஒரு எண்ணிக்கை! இந்தியாவில் 4,000 ஓலா எலக்ட்ரிக் கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும்போது, 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எங்களுடன் சேர வந்துள்ளனர்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாவிஷ் அகர்வாலின் எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு நிகழ்ச்சிகளில் ஏறக்குறைய 1 லட்சம் பேர் கலந்துக் கொண்டுள்ளனர். புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டு இருப்பதுடன், அறிவிக்கப்படி புதிய எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் (S1 Pro Sona Special Edition) எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் இந்த சிறப்பான நாளை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்1 புரோ ஆனது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இத்தகைய ஸ்கூட்டரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சோனா ஸ்பெஷல் எடிசனில் 24-கேரட் கோல்டு எலிமெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தங்கத்திலான ஸ்கூட்டரை எல்லாராலும் வாங்க முடியாது. இதற்காக சில போட்டிகளுக்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 25ஆம் தேதியான இன்றிலிருந்து துவங்கப்பட்டுள்ள அந்த போட்டிகளில் விருப்பம் உள்ளவர்கள் இணையம் வாயிலாகவோ அல்லது நேரடியாக ஷோரூமுக்கு சென்றோ பங்கேற்லாம். இந்த போட்டிகள் அனைத்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக ஆகும். வாய்ப்பை பெற்ற பின் ஸ்கூட்டருக்கான விலையை கொடுக்க வேண்டும். ஆனால், எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டருக்கான விலை எதுவும் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எஸ்1 சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஓலா ஷோரூமை தொடர்புக் கொள்ளவும். டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓலா ஷோரூம்களை தொடர்பு கொள்வது இன்னும் எளியதாக இருக்கும். மேலும், ஏற்கனவே ஏறுமுகத்தில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









