வீட்டுக்கு பால் பாக்கெட் வாங்குறத போல ஓலா இ-ஸ்கூட்டரை வாங்கும் இந்தியர்கள்! வேற பிராண்டே இந்தியால இல்லையா!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர் (Electric Two Wheeler) விற்பனையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நாட்டில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரே ஆண்டில் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 3 லட்சம் யூனிட் வரை விற்பனையாகி இருப்பதாகவே தற்பது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வரலாற்று சிறப்புமிக்க விற்பனை மைல்கல்லை செப்டம்பர் 9 ஆம் தேதி அன்றே இந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றது. உலக மின்சார வாகன நாளும் இதே நாளிலேயே அனுசரிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. அரசு தளமான வாஹன் தளத்தில் வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்களின்படி, 3,04,393 யூனிட்டுகள் வரை செப்டம்பர் 10 ஆம் தேதி நிலவரப்படி விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இவ்வளவு வேகமாக ஓலாவின் மின்சார வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பதை வைத்து பார்க்கையில் வெகு விரைவில் அடுத்த மைல்கல்லான 4 லட்சம் யூனிட் விற்பனையையும் அது எட்டிவிடும் என தெரிகின்றது. இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 16-க்கும் குறைவான வாரங்களே உள்ளன. இந்த இடைவெளிக்குள்ளேயே அது 4 லட்சம் யூனிட் விற்பனை என்கிற மைல்கல்லையும் எட்டிவிடும் என நம்பப்படுகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை மாதம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 35 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் ஓலாவின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரி மாதத்தில் மட்டுமே 32,422 யூனிட்டுகள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின.
அதேவேளையில், உச்சபட்ச விற்பனையாக கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 53,634 யூனிட்டுகள் ஓலா இ-வாகனங்கள் விற்பனையாகின. இதைபோலவே ஆண்டின் மற்ற மாதங்களிலும் அதிகபட்ச யூனிட் விற்பனை வளர்ச்சியையே ஓலா எலெக்ட்ரிக் நாட்டில் பதிவு செய்திருக்கின்றது. இதன் விளைவாகவே ஒரே ஆண்டில் 1 லட்சம், 2 லட்சம் மற்றும் 3 லட்சம் யூனிட் எனும் தொடர் விற்பனை சாதனையை அது படைத்திருக்கின்றது.
மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் 2024 இல் ஓலாவின் தயாரிப்பிற்கு நாட்டில் வரவேற்பு பலமடங்காக இரட்டிப்பாகி இருக்கின்றது என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் கடந்த 2021ம் ஆண்டை 240 யூனிட்டுகளுடனேயே முடித்தது. இதற்கு அடுத்ததாக 2022 ஆம் ஆண்டை 1.09 லட்சம் யூனிட்டுகளுடனும், 2023 ஆம் ஆண்டை 2.67 லட்சம் யூனிட்டுகளுடனும் அது முடித்தது.
இந்த நிலையிலேயே 2024 ஆம் ஆண்டை 4 லட்சம் யூனிட்டுகளுடன் அது முடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழும்பியிருக்கின்றது. ஓலாவின் இந்த விற்பனை அதன் போட்டியாளர்களான டிவிஎஸ் (ஐக்யூப்), பஜாஜ் (சேத்தக்) மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கும் வகையில் உள்ளது.
இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எஸ்1 (S1) வரிசையில், எஸ்1 எக்ஸ் (S1 X), எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, சமீபத்தில் தன்னுடைய எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster), ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுதவிர, விரைவில் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்திய மின்சார வாகன உலகின் மிகப் பெரிய ஜாம்பவானாக ஓலா எலெக்ட்ரிக் எதிர்காலத்தில் அவதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விற்பனை சாதனை நிகழ்வு அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின்மீது பலர் குறை கூறினாலும் இந்தியர்கள் பலர் இந்த நிறுவனத்தை நாடி வருவது ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications








