மூக்கு பொடி டப்பா மாதிரி புது பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! இதுல அப்படி என்ன புதுசா இருக்குது தெரியுமா?
ஓலா நிறுவனம் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஓலா நிறுவனத்தின் பைக் இன்று அறிமுகமானது. ஓலா நிறுவனம் இன்று ரோடுஸ்டர் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஓலா நிறுவனம் சொந்தமாக பேட்டரி தயாரிப்பு ஆலையையும் உருவாக்கியுள்ளது. இது குறித்து அறிவிப்புகளையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் வாகன உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் அதன்படி இந்நிறுவனம் தற்போது தனது புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் சேர்த்து இந்நிறுவனம் பேட்டரி தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பேட்டரிகள் குறித்த சில முக்கிய அறிவிப்புகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ஐந்து ஜிகாவாட் ஹவர் கொண்ட பேட்டரி தயாரிப்பாலையை தற்போது நடத்தி வருகிறது. இந்த ஆலையை விரிவுபடுத்தி இந்நிறுவனம் 2026ம் ஆண்டு இந்த ஆலையின் அளவை 20 ஜிகா வாட் ஹவர் ஆலையாக மாற்றவும் 2030ம் ஆண்டு இதை 100 ஜிகா வாட் ஹவர் ஆலையாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள ஐந்து ஜிகா வாட் ஹவர் ஆலையில் புதிய பேட்டரிகளின் தயாரிப்பு துவங்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் இந்த ஆலையில் புதிய விதமான பேட்டரிகளை தற்போது தயாரித்து வருகிறது. பொதுவாக நம் வீடுகளில் டிவி ரிமோட், கடிகாரம் போன்ற கருவிகளுக்கு சிறிய ரக பேட்டரிகளை பயன்படுத்துவோம் ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அந்த ரக செல்களை வைத்து பேட்டரி தயாரிக்க முடியாது. அதற்கு பதிலாக 2170 செல்கள் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிக்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் விற்பனையாகி வரும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த ரக பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த 2170 என்ற பெயர் பேட்டரியின் அளவிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த பேட்டரிகள் 21மிமீ விட்டமும் 70 மிமீ உயரமும் கொண்ட ஒரு சிலிண்டர் அமைப்பை கொண்ட பேட்டரியாக உருவாக்கப்படுகிறது.
நாம் வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண பேட்டரி செல்களை விட இதில் அதிக கொள்ளளவு இருப்பதால், இந்த பேட்டரிகளை பயன்படுத்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை சுலபமாக இயக்க முடியும் என்பதால் இந்த ரக பேட்டரிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ஓலா வாகனங்களிலும் இந்த ரக பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் நடத்தி வரும் ஆலையில் இந்த பேட்டரியை மேம்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது நிறுவனம் புதிதாக பெரிய அளவு கொண்ட 4680 என்ற பேட்டரியை தயார் செய்துள்ளது. அதாவது இந்த பேட்டரி 46 மிமீ விட்டமும் என்பது 80 மிமீ உயரமும் கொண்ட செல்லாக உருவாக்கப்படுகிறது. அதாவது இது தடிமனான உருளை போன்ற அமைப்பில் இருக்கும்
ஓலா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த செல்லுக்கு பாரத் செல் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது இந்த செல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் செல்லை விட ஐந்து மடங்கு அதிக எரிசக்தியை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.5 மடங்கு வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்டது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பேட்டரியை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சாதாரணமாக தற்போது உள்ள பேட்டரியில் இயக்க வாகனம் இயங்கும்போது எவ்வளவு ரேஞ்ச் தருகிறதோ அதைவிட 10% கூடுதலாக ரேஞ்ச் தரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை நிறுவனம் முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைத்து, இந்தியாவிலேயே தயாரிக்கிறது. இதனால் இந்த பேட்டரி முழுமையாக இந்திய தயாரிப்பு பேட்டரி ரக விற்பனைக்கு வருகிறது.
ஓலா நிறுவனம் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டு முதல் இந்த ரக பேட்டரிகளை தனது வாகனங்களில் பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டால் ஓலா நிறுவனத்தின் வாகனங்கள் அதிக ரேஞ்ச் மற்றும் வேகமான சார்ஜிங் திறன் கொண்ட வாகனமாக மாற வாய்ப்புள்ளது.
மேலும் ஓலா நிறுவனம் இந்த செல்களை வேறு பயன்பாட்டிற்கான பேட்டரிக்காகவும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. முக்கியமாக சோலார் பவர் மூலம் மின்சக்தி எடுக்கும் நிறுவனங்களுக்கு அதிக கொள்ளளவு கொண்ட பேட்டரிகள் தேவைப்படுவதால் அதற்கு இந்த ரக பேட்டரிகள் சிறந்த தேர்வாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக உங்கள் வீட்டுக்கே சார்ஜ் வழங்கும் வகையிலான பேட்டரிகளையும் உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன விலையில் மிக அதிகமான விலை அதன் பேட்டரிக்கான விலை தான். இந்த செல்களை ஓலா நிறுவனமே தயாரிப்பதன் மூலம் மூலா நிறுவனத்தின் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரம் அதன் மீதான நம்பகத்தன்மையும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓலா நிறுவனத்தின் இந்த தொழிற்நுட்பம் மார்க்கெட்டிற்கு வருவதை பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









