தங்கம் விக்குற விலையில் ஓலா செய்துள்ள காரியத்தை பாருங்க! 22 கேரட் கூட இல்ல... சுத்தமான 24 கேரட் கோல்டு!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவில் குறுகிய காலத்தில் முன்னணி 2-வீலர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் டாப்-10 பட்டியலில் ஓலா எலக்ட்ரிக் இடம்பிடித்து வருகிறது. இத்தனைக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) மட்டுமே ஆகும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் கவனம் எழ ஆரம்பித்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.
மக்கள் மத்தியில் உள்ள தனது மவுசை மேலும் எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பதை தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஓலா எஸ்1 புரோ (S1 Pro) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய ஸ்பெஷல் எடிசன் 'சோனா' (Sona) என்கிற பெயரில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் தற்போது புதிய எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் டீசர் (Teaser) வீடியோவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஸ்கூட்டரின் தோற்றத்தை தெளிவாக காண முடிகிறது. வரவிருக்கும் கிறித்துமஸ் (Christmas) பண்டிகையின்போது இந்த ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது.
எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய சோனா ஸ்பெஷல் எடிசன் ஆனது கிறித்துமஸ் பண்டிக்கைக்காக மட்டுமின்றி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வேறொரு சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடும் விதமாகவும் டிசம்பர் 25ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது என்னவென்றால், வரவிருக்கும் டிச.25ஆம் தேதியில் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் ஷோரூம்களை திறக்க ஓலா எலக்ட்ரிக் தயாராகி வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அவ்வப்போது புது, புது ஷோரூம்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திறந்து வருகிறது. இருப்பினும், 4000 என்பது பெரிய எண்ணிக்கை ஆகும். இதனை கொண்டாடும் விதமாகவே எஸ்1 புரோ ஸ்கூட்டரில் சோனா எடிசன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் (CEO Bhavish Agarwal) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 24 கேரட் கோல்டு பதிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த ஸ்பெஷல் எடிசன் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிசம்பர் 25ஆம் தேதிக்கு பின் ஓலாவின் அனைத்து டீலர்ஷிப் ஷோரூம்களிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எஸ்1 புரோ சோனா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என குறிப்பிடாமல், ஸ்கூட்டரை வெல்லலாம் என பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், ஏதேனும் போட்டியை நடத்திதான் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை வழங்குவர் என எதிர்பார்க்கிறோம். இதனால், எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆரம்பத்தில் ஷோரூம்களில் அதிக நம்பிக்கை இல்லாமல், முற்றிலுமாக இணையத்தை மட்டுமே சார்ந்திருக்க முடிவு செய்தது. அதன்பின், தனது அந்த முடிவில் இருந்து மாறிய ஓலா நிறுவனம் விரைவில் சுமார் 4 ஆயிரம் ஷோரூம்களை நாடு முழுவதும் திறக்க உள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்படும் எஸ்1 புரோ சோனா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் விலை எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









