வயதானவர்கள் இருக்கும் வீட்டிற்கு ஏற்றது... விலையை கேட்டால் உடனே புக் பண்ணிடுவீங்க!!
ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதன் காரணமாகவே, பைக்குகளை காட்டிலும் உலகளவில் ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வசிப்போரின் முதன்மையான தேர்வாக ஸ்கூட்டர் விளங்குகிறது. அதுமட்டுமின்றி, ஸ்கூட்டர்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்துக் கொள்வதும் எளியது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் ஒன்று வயதானவர்களுக்காக 3-சக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
வயதானவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஏற்றவை கிடையாது. கார், வேன், குறைந்தப்பட்சம் ரிக்ஷா ஆட்டோ தான் வயதானவர்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள உத்தர பிரதேசத்தின் அலிகார்க் என்கிற பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமான கேலா சன்ஸ் (Kela Sons) 3-சக்கரங்களை கொண்ட பிஇவி பாண்டோம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி உள்ளனர்.

இந்த வாகனம் தொடர்பான வீடியோ, மிஸ்டர்.ஆட்டோ என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படையில் 2-சக்கரங்களை மட்டுமே கொண்ட பாண்டோம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அதில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளதன் காரணமாகவே இந்த 3-சக்கர வாகனத்தின் பெயரில் 'பாண்டோம்' என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த உத்தர பிரதேச ஷோரூம் உருவாக்கியுள்ள பிஇவி பாண்டோம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடவசதி மிகவும் அதிகமாகவே உள்ளது என சொல்லலாம்.
எந்த அளவிற்கு என்றால், பின் இருக்கையில் ஒருவரால் அமர்ந்துக் கொண்டே சவுகரியமாக தூங்கிக் கொண்டு செல்ல முடியும். மேலும், பின் இருக்கையில் அமர்பவர்கள் எளிதாக நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வசதியாக முன் இருக்கையை மடக்கிக் கொள்ளலாம். இதன்படி, தேவையென்றால் முன் இருக்கையை முற்றிலுமாக மடக்கி வைத்துக் கொள்ளலாம். பிஇவி பாண்டோம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.88,000 என்கிற விலையில் தங்களது ஷோரூமில் விற்பனையில் உள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் ட்யூயல் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட் செட்-அப் உள்ளது. ஹெட்லைட்டை சுற்றிலும் வட்ட வடிவில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் எல்இடி தரத்தில் இருப்பினும், டர்ன் இண்டிகேட்டர்கள் பழையது போல் ஹலோஜன் தரத்திலேயே உள்ளன. இந்த 3-சக்கர ஸ்கூட்டரில் 10 இன்ச்சில் சில்வர் நிறத்திலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சக்கரங்களில் 190மிமீ டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் இரு முனைகளிலும் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இடதுப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கள் ஹார்ன் மற்றும் இண்டிகேட்டர்களையும், வலதுப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கள் ஹெட்லைட்கள் மற்றும் டிரைவ் மோட்களையும் கண்ட்ரோல் செய்யக்கூடியவைகளாக உள்ளன.

சஸ்பென்ஷனுக்கு ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக்கும், பின்பக்கத்தில் சுருள்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 3-சக்கர ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமே பின் இருக்கை தான். ஏனெனில், ஸ்கூட்டரின் பின் இருக்கையை நன்கு அகலமானதாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த இருக்கையில் அமர்பவர்கள் தங்களது கைகளை வைத்துக் கொள்வதற்கான ஹேண்ட் ரெஸ்ட்கள் தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்யக்கூடியவைகளாக உள்ளன.
அதேபோல், இந்த ஸ்கூட்டரில் பொருட்களையும் அதிகமாக கொண்டு செல்லலாம். இதற்காக ஸ்கூட்டருக்கு பின்பக்கத்தில் ஒரு பாக்ஸ் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம். இன்னொரு ஸ்டோரேஜ் பகுதி ஆனது இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 60 வோல்ட் 32 ஆம்பியர் ஈய அமில பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 50இல் இருந்து 60கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உத்தர பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் இந்த 3-சக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இங்கு நம் தமிழ்நாட்டில் வாங்க முடியுமா என்பது தெரியவில்லை. கூடுதல் விபரங்களுக்கு கேலா சன்ஸ் டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை தொடர்புக் கொள்ளவும். மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈய அமில பேட்டரிக்கு பதிலாக, கூடுதல் பணத்தை செலுத்தினால் லித்தியம்-இரும்பு பேட்டரியையும் பெறலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









