ரூ.3 லட்சம் மட்டும்தான் கையில் இருக்கா? இதில் ஒரு பவர்ஃபுல் பைக்கை வீட்டிற்கு ஓட்டி செல்லலாம்!!
இந்தியாவில் ஒரு சமயத்தில், ரூ.1 லட்சத்தில் பைக் வாங்கினாலே ஆச்சிரியமாக பார்த்தனர். ஆனால், இன்றோ ரூ.1 லட்சத்திற்குள் புதியதாக பைக் வாங்குவதே சவாலான காரியமாக உள்ளது. யமஹா ஆர்15, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 என இளைஞர்கள் விரும்பி வாங்கும் பைக்குகளை ரூ.2 லட்சம் இல்லாமல் வாங்க முடிவதில்லை.
இதனால், ரூ.3 லட்சத்தில் பைக் வாங்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. லாங் ரைடுக்கு ஏற்றவாறு ஆற்றல்மிக்க பைக்கை வாங்க விரும்பினால், குறைந்தது ரூ.2 - 3 லட்சத்தில் வாங்கினால்தான், பின்னர் காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். அவ்வாறு ரூ.3 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட 5 மாடர்ன் இந்திய பைக்குகளை இனி பார்க்கலாம்.

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 401 (Husqvarna Svartpilen 401): இந்தியாவில் தற்போதைக்கு ரூ.3 லட்சத்திற்குள் அதிக இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினை கொண்ட பைக்காக ஸ்வார்ட்பிளேன் 401 விளங்குகிறது. பஜாஜின் கட்டுப்பாட்டில் இந்தியாவில் செயல்படும் ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக்காக விளங்கும் இது, கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 46 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறும் ஸ்வார்ட்பிளேன் 401 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.92 லட்சம் ஆகும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் (KTM 390 Adventure X): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 390சிசி கேடிஎம் பைக். இந்த பைக்கும் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் புதிய 398சிசி என்ஜின் பொருத்தப்படுவதில்லை. பழைய 373சிசி என்ஜின் தான் இந்த பைக்கில் கிடைக்கிறது. இருப்பினும், அதிகபட்சமாக 43.5 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Triumph Scrambler 400 X): பஜாஜ் -டிரையம்ப் கூட்டணியில் உருவான ஆற்றல்மிக்க பைக். இதில் பொருத்தப்படும் என்ஜின் அதிகப்பட்சமாக 40 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ரூ.2.63 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இந்த பைக்கில் ஆஃப்-ரோடு பயணங்களையும் தைரியமாக மேற்கொள்ளலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 (TVS Apache RTR310): பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடன் இணைந்து டிவிஎஸ் உருவாக்கியுள்ள ஆற்றல்மிக்க நேக்டு ரக பைக் இதுவாகும். இதில் பொருத்தப்படும் 312சிசி என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 35.6 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். ரூ.2.43 லட்சத்தில் இருந்து இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. இந்த பைக்கும் மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதே ஆகும்.

ஹோண்டா சிபி300ஆர் (Honda CB300R): ரூ.3 லட்சத்திற்குள் ஓரளவிற்கு ஆற்றல்மிக்க பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு சிபி300ஆர் ஏற்றதாக இருக்கும். ஹோண்டாவின் சிபி வரிசை பைக்குகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆதலால், ஹோண்டா சிபி பைக்கை வாங்க விரும்புபவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஆற்றல்மிக்க பைக்கை வாங்கலாம். இந்த பைக்கில் 31 எச்பி வரையிலான என்ஜின் பவர் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ரூ.3 லட்சத்தில் பைக் வாங்குவது எல்லாம் சாதாரணமாகி விட்டது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பைக்குகளின் விலை ரூ.2 - 3 லட்சத்தில் இருந்தாலும், இவை யாவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரங்கள் அதிகமாக வரும் என்பதை மறந்துவிட வேண்டாம். இதில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









