ராயல் என்ஃபீல்டு கூட இந்த விலையில் தருவதற்கு யோசிக்கும்... சீன நிறுவனத்துக்கு எவ்வளவு பெரிய மனசு!!
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், அதற்கேற்ப புதிய வாகனங்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வரையில் விற்பனையை அதிகரிக்க சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில், க்யூ.ஜே மோட்டார் (QJ Motor) நிறுவனம் அதன் க்யூ.ஜே மற்றும் மோட்டோ மோரினி (Moto Morini) பைக்குகளுக்கு சூப்பரான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி எவ்வளவு குறைவான விலையில் இந்த பைக்குகளை வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
க்யூ.ஜே மோட்டார், சீனாவை சேர்ந்த பிரபலமான பைக் பிராண்ட்களுள் ஒன்று. சீனாவின் கியான்ஜியாங் மோட்டார்சைக்கிள் குழுமத்தின் கீழ் செயல்படும் க்யூஜே மோட்டார் நிறுவனம் இந்தியாவிலும் தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இருப்பினும், விலை அதிகமான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதாலும், சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்குகள் பெரிய அளவில் இல்லாததினாலும் க்யூஜே பைக்குகள் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

இந்த நிலையில், இதனை மாற்றும் விதமாக க்யூ.ஜே மோட்டார் நிறுவனம் அதன் க்யூஜே பைக்குகள் மற்றும் மோட்டோ மோரினி பைக்குகளுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின்படி, க்யூஜே எஸ்.ஆர்.சி பைக்குகளை சுமார் ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம்.
எஸ்.ஆர்.சி250 மற்றும் எஸ்.ஆர்.சி500 என 2 விதமான க்யூ.ஜே எஸ்.ஆர்.சி பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், எஸ்.ஆர்.சி250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.79 லட்சத்தில் இருந்து ரூ.1.49 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பைக்கின் விலை ரூ.30,000 குறைக்கப்பட்டு உள்ளது.
மறுப்பக்கம், எஸ்.ஆர்.சி500 பைக்கின் விலை ரூ.40,000 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், முன்பு ரூ.2.39 லட்சமாக இருந்த இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.99 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல், க்யூஜே மோட்டரின் எஸ்.ஆர்.வி300 மற்றும் எஸ்.ஆர்.கே400 பைக்குகளின் விலைகளும் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன.

இதன் விளைவாக, க்யூ.ஜே எஸ்.ஆர்.வி300 மற்றும் எஸ்.ஆர்.வி400 பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. மறுப்பக்கம், மோட்டோ மோரினி பைக்குகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. மோட்டோ மோரினி எக்ஸ்-கேப்650 பைக் இனி ரூ.5.99 லட்சம் என்கிற விலையில் கிடைக்கும். இது, பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
முன்பு இருந்ததை விட எக்ஸ்-கேப்650 பைக்கின் விலை ரூ.1.31 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மோடோ மோரினி எக்ஸ்-கேப் 650எக்ஸ் பைக்கின் விலை இனி ரூ.6.49 லட்சம் ஆகும். இது, முன்பு இருந்ததை விட ரூ.1.01 லட்சம் குறைவாகும். மோட்டோ மோரினி பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுபவை பவர்ஃபுல்லான பைக்குகள் ஆகும். இதன் காரணமாகவே அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: க்யூ.ஜே மோட்டாரின் பைக்குகளுக்கு ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் மிகுந்த போட்டியாக உள்ளன. இதனை சமாளிக்க வேண்டுமென்றால், இவ்வாறான சலுகை அறிவிப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த சலுகை அறிவிப்பு, இந்தியாவில் க்யூஜே மோட்டார் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








