இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
சென்னயைச் சேர்ந்த நான்கு என்ஜினியர்கள் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் ராப்டீ (Raptee). இவர்கள் முன்னாள் டெஸ்லா (Tesla) மற்றும் விப்ரோ (Wipro) ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ராப்டீ ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலேயே உற்பத்தி ஆலையை அமைத்திருக்கின்றது. இந்த ஆலை ஆண்டிற்கு 1 லட்சம் யூனிட்டுகள் டூ-வீலர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக எலெக்ட்ரிக் பைக்கையே தயாரித்து உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் போன்ற முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவை மையமாகக் கொண்டு இந்தியாவில் கால் தடம் பதித்த நிலையில், ராப்டீ நிறுவனம் தனித்துவமாக எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ மையமாகக் கொண்டு களமிறங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே, ராப்டீ அதன் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் மின்சார பைக் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. எனவே நாம் எதிர்பார்த்ததைவிட வெகு விரைவில் ராப்டீ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராப்டீ தன்னுடைய முதல் இ-பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை. அறிமுகத்தின் போது அதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் ராப்டீ-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி, நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 135 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அதுமட்டுமல்ல இந்த எலெக்ட்ரிக் பைக் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் கொண்டிருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுதவிர, ஒரு முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜ் தரும் வகையில் எலெக்ட்ரிக் பைக்கை தயார் செய்திருப்பதாகவும் ராப்டீ தெரிவித்திருக்கின்றது.
இதுமட்டும் இல்லைங்க இந்த எலெக்ட்ரிக் பைக்கை ராப்டீ கார்களை சார்ஜ் செய்யும் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், டூ-வீலர் பாயிண்ட் மட்டுமின்றி கார்களுக்கான சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் அதன் இ-பைக்கைச் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதுமட்டுமின்றி அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை அது கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. உற்பத்தி பணிகள் தொடங்கிவிட்டதால் விரைவில் இதன் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள்ளேயே இந்த இ-பைக் வெளியீட்டைப் பெற்றும் விடும் என தெரிவிக்கின்றன. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. அதேவேளையில், நிறுவனம் விற்பனையகத்தை சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், விரைவில் முதல் இ-பைக்கை சோதனையோட்டத்திற்கு உட்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ராப்டீ அதன் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கி இருக்கின்றது. சென்னையில் தயாரிக்கப்படும் இந்த தயாரிப்பு உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ப அந்த பைக் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த இ-பைக்கை நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








