சென்னை என்ஜினீயர்களின் அருமையான கண்டுப்பிடிப்பு!! உலக பணக்காரர்கள் முன்னிலையில் கெத்தாக நிற்குது!
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராப்டீ எனர்ஜி (Raptee Energy) என்கிற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை காட்சிக்கு நிறுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், உள்ளே என்னென்ன பாகங்கள் உள்ளன என்பது பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வெளிப்பக்க பேனல்கள் இல்லாமல் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அதேநேரம், இந்திய நிறுவனங்களும் பங்கேற்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றன.

அந்த வகையில், இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ராப்டீ எனர்ஜி தன்னை இந்த உலக அரங்கில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த 4 பொறியியலாளர்களால் துவங்கப்பட்ட நிறுவனமே ராப்டீ எனர்ஜி ஆகும். இந்த 4 பொறியியலாளர்களில் ஒருவர் முன்னாள் டெஸ்லா நிறுவன ஊழியர் மற்றும் ஒருவர் முன்னாள் விப்ரோ நிறுவன ஊழியர் ஆவர்.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டது மட்டுமின்றி, தான் உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் ராப்டீ எனர்ஜி நிறுவனம் பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் மற்றும் ஹை-வோல்டேஜ் டிரைவ்டிரெயின் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராப்டீ எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் வருகிற 2023 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க டிரைவ்டிரெயினை கொண்டதாக இந்த எலக்ட்ரிக் பைக்கை ராப்டீ எனர்ஜி உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக, அதிகப்பட்சமாக மணிக்கு 135கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ராப்டீ தெரிவித்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் பைக்கை எந்தவொரு சிசிஎஸ்2 சார்ஜிங் நிலையத்திலும் வெறும் 45 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் என கூறும் ராப்டீ, சிசிஎஸ்2 சார்ஜிங் நிலையம் மூலமாக 40கிமீ தொலைவுக்கு இயங்குவதற்கு தேவையான சார்ஜை வெறும் 15 நிமிடங்களில் பெற்றுவிடலாமாம். இந்த எலக்ட்ரிக் பைக்கில் 0-இல் இருந்து 60kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராப்டீ எனர்ஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் ரூ.85 கோடி முதலீட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் தனது முதல் தொழிற்சாலையை நிறுவி உள்ளது. பேட்டரி பேக் அசெம்பிளி லைனையும், ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தையும் இந்த தொழிற்சாலை கொண்டதாக இருக்கும். ஏற்கனவே செயல்பட துவங்கிவிட்ட ராப்டீ நிறுவனத்தின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தில் உருவாக்கப்பட்ட முதல் பைக் 2024 தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
கட்டமைக்கப்பட்டு வரும் ராப்டீ எனர்ஜியின் தொழிற்சாலையில் வருடத்திற்கு 1 இலட்சம் வரையிலான எண்ணிக்கையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது. வாகன உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளுக்காக 470 பணியாளர்களை ராப்டீ எனர்ஜி நிறுவனம் பணியில் அமர்த்தி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெறுமனே பங்கேற்றது மட்டுமில்லாமல், தனது கண்டுப்பிடிப்பையும் காட்சிக்கு நிறுத்தி இருப்பதன் மூலம் ராப்டீ எனர்ஜி நிறுவனத்தின் ஆர்வத்தை உணர முடிகிறது. 2024 ஏப்ரல் மாதத்திற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் ராப்டீயின் எலக்ட்ரிக் பைக் முழுவதுமாக அறிமுகத்திற்கு தயாராகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









