முன்தொகையே இல்லாம இ-பைக்கை ஓட்டி போகலாம்.. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நிறுவனம்! இஎம்ஐ தொகையும் கம்மி
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) உள்ளது. இந்த நிறுவனமே அதன் மின்சார இரண்டு சக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் முயற்சியாக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. அந்தவகையில், பூஜ்ஜியம் முன் தொகை, மிகவும் குறைவான இஎம்ஐ கட்டணம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளையே அது அறிவித்து உள்ளது. புதிய வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டே இந்த சலுகைகளை அது அறிவித்து இருக்கின்றது. ரிவோல்ட் நிறுவனம் தற்போது மின்சார பைக் பிரிவை மட்டுமே குறிவைத்து இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தின்கீழ் ஆர்வி400 (RV400) மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் (RV400 BRZ) எனும் இரண்டு மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் ஆர்வி400 மாடலுக்கே சிறப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய திட்டத்தின் வாயிலாக எலெக்ட்ரிக் பைக்கை பூஜ்ஜியம் முன் தொகைக் கட்டணத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும்.

தொடர்ந்து, மிக மிக குறைவான இஎம்ஐ கட்டணமாக ரூ. 4,444 செலுத்தும் ஆப்ஷனையும் அது அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்த சலுகையைப் பெற எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, இஎம்ஐ திட்டத்தை புராசஸ் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம், வருமான சான்று என எதற்கும் கட்டணம் செலுத்த தேவையில்லே என கூறப்படுகின்றது.
இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய ரிவோல்ட் மோட்டார்ஸ் விற்பனையகங்களை நாடலாம். இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஓலா மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர்களுடன் தற்போது ரிவோல்ட்டும் இணைந்திருக்கின்றது.
அடிக்கடி சிறப்பு சலுகைகளை வழங்குவதில் ரிவோல்ட் நிறுவனமும் பெயர்போன பிராண்டாக உள்ளது. முன்னதாக அது ஆர்வி400 மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் மாடல்களின் விலையில் ரூ. 5 ஆயிரம் வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது குறைவான இஎம்ஐ கட்டணம் மற்றும் பூஜ்ஜியம் முன் தொகை திட்டங்களை அது அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
ரிவோல்ட் ஆர்வி400 மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக எலெக்ட்ரிக் பைக்கில் 72V, 3.24KWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த இ-பைக்கில் முன் மற்றும் பின் வீலில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக், சிபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு 5 ஆண்டுகள் அல்லது 75 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டியையும், பேட்டரிக்கு 5 ஆண்டுகள் அல்லது 75 ஆயிரம் கிமீ வாரண்டியையும் அறிவித்து இருக்கின்றது. சார்ஜருக்கு 2 ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே எலெக்ட்ரிக் பைக்குகளுக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை அதிகப்படுத்தும் நோக்கிலேயே ரிவோல்ட் மோட்டார்ஸ் தற்போது பூஜ்ஜியம் முன் தொகை திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இந்த திட்டம் எவ்வளவு நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்பது துள்ளியமாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








