திடீரென அதிகரித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை.. ஈ போல மொய்த்த கூட்டம் எல்லாம் கலைய போகுது!
இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு (Electric Vehicles) மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்ற காரணத்திலேயே புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை போலவே புதுமுக மின்சார வாகன உற்பத்தியாளர்களும் தொடர்ச்சியாக நாட்டில் அறிமுகமாகிய வண்ணம் இருக்கின்றனர்.
அந்தவகையில், இந்தியாவில் சமீபத்தில் தன்னை ஓர் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளராக அறிமுகம் செய்துக் கொண்ட ஓர் நிறுவனமே ரிவர் (River) ஆகும். இது ஓர் இந்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக வருகின்றது.

எதிர்காலத்திற்காக மிகப் பெரிய பிளானை இந்த இந்த நிறுவனம் போட்டு வைந்திருந்தாலும், இப்போதைய நிலவரப்படி ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இன்டீ (Indie) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே ரிவர் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் சற்று பெரிய மற்றும் கொழு கொழு தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவே ஆகும். இத்தகைய தோற்றத்தின் காரணத்தினாலேயே இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 'எஸ்யூவி ஸ்கூட்டர்' என அழைக்கின்றனர். இத்தகைய ஓர் வாகனத்தின் விலையையே தற்போது ரிவர் நிறுவனம் இந்தியாவில் உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்த வாகனத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ரிவர் நிறுவனம். அப்போது அறிமுகமாக ரூ. 1.25 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், இப்போது இந்த விலையில் இன்டீ விற்பனைக்குக் கிடைக்கவில்லை.
இதன் விலையில் ரூ. 13 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது ரிவர் இன்டீ ரூ. 1.38 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. விலை உயர்விற்கான காரணம் தெரியவரவில்லை. இந்த விலை உயர்விற்கு எந்த அப்கிரேஷனும் காரணமில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கேற்ப, ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதிக ரேஞ்ஜ் திறனுக்காக இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டாரை பொருத்த வரை 6.7 kWh திறன் கொண்ட மோட்டாரே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 26 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் ஆகும். அதேவேளையில், வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை இன்டீ எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதே இதன் எலெக்ட்ரிக் மோட்டார்.
இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பான பிரேக்கிங்கிற்காக 240 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்க வீலிலும், 200 மிமீ டிஸ்க் பிரேக் பின் வீலிலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பிற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ட்வின் ஹைட்ராலிக் செட்-அப் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதை வைத்து பார்க்கையில் மெக்கானிக்கல் அம்சத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது துள்ளியமாக தெரிகின்றது. இருப்பினும் இதன் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது இந்திய மின்சார வாகன விரும்பிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக வளர்ந்து வரும் நிறுவனம் இவ்வாறு செய்திருப்பது தேடி வரும் வாடிக்கையாளர்களை விரட்ட செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








