இந்தியாவில் அடுத்த 2வாரங்களில் 4பைக்குகள் அறிமுகமாக போகுதா! புது பைக் வாங்கற பிளானிருந்தா கொஞ்சம் காத்திருங்க!
இந்தியாவின் இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் நான்கு புதுமுக பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வாகன மாடல்கள் என்ன? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். மிக முக்கியமாக அவை எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் இந்தியாவில் மூன்று புதுமுக மோட்டார்சைக்கிள் மாடல்களை அடுத்து வர இருக்கும் இரண்டு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்நிறுவனம் விரைவில் கோவாவில் மோட்டோவெர்ஸ் 2024 நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றது.

நாளை (நவம்பர் 22) தொடங்கி நவம்பர் 24 வரை என மூன்று நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே ராயல் என்பீல்டு நிறுவனம்தன்னுடைய மூன்று புதிய பைக் மாடல்களை வெளியீடு செய்ய இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கிளாசிக் 650 (Classic 650), கிளாசிக் கோன் 350 (Classic Goan 350) மற்றும் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 (Flying Flea C6) ஆகிய டூ-வீலர் மாடல்களையே அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுதவிர, கேடிஎம் (KTM) நிறுவனமும் அதன் அடுத்த தலைமுறை 390 அட்வென்சர் (390 ADV) பைக்கையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ராயல் என்பீல்டு கோன் கிளாசிக் 350: இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக்கை வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது ராயல் என்பீல்டு. இந்த அறிமுகத்தை முன்னிட்டே நேற்றைய தினமும் கோன் கிளாசிக் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது.
இதுவே இந்த வாகனம் காட்சிப்படுத்தப்படுவது முதல் முறையாகும். கிளாசிக் கோன் 350 ஓர் பாபர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இதுவே இந்த பைக் கிளாசிக் 350 இடமிருந்து மாறுபட்டுக் காணப்படும் என்பதற்கு சான்றாக இருக்கின்றது. அதேவேளையில், எஞ்சின் மற்றும் பிற மெக்கானிக்கல் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 650: தற்போது விற்பனையில் இருக்கும் கிளாசிக் 350 பைக் மாடலின் 650 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடலே இதுவாகும். இதனை சமீபத்தில் மிலன்-இல் நடைபெற்ற இஐசிஎம்ஏ 2024 வாகன கண்காட்சியின் வாயிலாகவே இந்த பைக்கை ராயல் என்பீல்டு இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
அப்போதே இதன் விலைகளையும் ராயல் என்பீல்டு அறிவித்துவிட்டது. இதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் இதை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ. 3.39 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ராயல் என்பீலட்டு ஃப்ளையிங் ஃப்ளியா சி6: இதுவே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் மின்சார பைக் மாடல் ஆகும். இதையும் இஐசிஎம்ஏ 2024 வாகன கண்காட்சியில் வைத்தே ராயல் என்பீல்டு முதல் முறையாக வெளியீடு செய்தது. இதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே கோவாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியிலும் இந்த வாகனத்தை அவர்கள் வெளியீடு செய்ய இருக்கின்றனர்.
கேடிஎம் 390 அட்வென்சர்: இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பைக் காதலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இந்த பைக் மாடல் இருக்கின்றது. ராயல் என்பீல்டை போலவே கேடிஎம்-ம் இந்த பைக்கை இஐசிஎம்ஏ-வில் வைத்து காட்சிப்படுத்தியது. இந்த பைக் இந்தியாவில் சீக்கிரமே வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி டிசம்பர் முதல் வாரத்தில் அது வெளியீடு செய்யப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நான்கு பைக்குகளின் வருகையும் இந்தியாவில் உள்ள டூ-வீலர் காதலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைய இருக்கின்றது. இந்த பைக்குகள் மட்டுமல்ல இன்னும் சில டூ-வீலர்களும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகையால், இந்த அடுத்து வரும் நாட்கள் டூ-வீலர் பிரியர்களுக்கு மிகப் பெரிய வேட்டையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








