ராயல் என்ஃபீல்டு எப்படி தான் விற்க போறாங்களோ! பைக்கில் எல்லாமே சூப்பரா இருக்கு!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக பியர் 650 (Bear 650)-ஐ அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டில் இருந்து விற்பனைக்குவரும் 5வது 650சிசி பைக் இதுவாகும். இந்த 5 பைக்குகளும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை அடிப்படையாக கொண்டே புதிய பியர் 650 பைக்கை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி உள்ளது. ஆனால், தோற்ற அடிப்படையில் பார்த்தால் பியர் 650 ஆனது ஒரு ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் ஆகும்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால், இண்டர்செப்டர் 650 பைக்கை ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்திற்கு மாடிஃபை செய்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் பியர் 650 பைக் உள்ளது. இந்த பைக் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பைக்கின் 5 முக்கிய அம்சங்களை பற்றி இனி பார்க்கலாம்.

டிசைன் & வசதிகள்: ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று இந்த பைக்கில் தட்டையான இருக்கை செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சக்கரங்களும் முன்பக்கத்தில் பெரியதாகவும், பின்பக்கத்தில் சிறியதாகவும் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் வழக்கம்போல் வட்ட வடிவில் வழங்கப்பட்டாலும், எல்இடி இண்டிகேட்டர்கள் புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளன.
சஸ்பென்ஷன்: இண்டர்செப்டர் 650 பைக் உடன் ஒப்பிடுகையில் இந்த பியர் 650 பைக்கில் சஸ்பென்ஷன் சற்று அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. பைக்கிற்கு முன்பக்கத்தில் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் புதிய ட்யூயல் ஷாப் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கையின் உயரம் 830மிமீ ஆகும். மற்ற ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளை காட்டிலும் இது அதிகமாகும்.

செயல்படுதிறன்: ஒரே விதமான சேசிஸில் உருவாக்கப்பட்டாலும், பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரையில் பியர் 650 ஆனது மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மற்ற 650சிசி பைக்குகளில் இரு பக்கங்களிலும் எக்ஸாஸ்ட் குழாய்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை ஒரே எக்ஸாஸ்ட் குழாயாக மாற்றி பியர் 650 பைக்கில் ராயல் என்ஃபீல்டு வழங்கியுள்ளது.
இதன் மூலமாக, என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய அதிகப்பட்ச டார்க் திறன் அளவு 52 என்.எம்-இல் இருந்து 56.5 என்.எம் ஆக அதிகரித்துள்ளது. மற்றப்படி, என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய குதிரையாற்றலில் மாற்றமில்லை; 47 எச்பி ஆக தொடர்கிறது. மேலும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப பைக்கின் சேசிஸ் சற்று மாற்றப்பட்டுள்ளதால், புதிய பியர் 650 பைக்கின் எடை குறைவாக உள்ளது.
பிரேக்கிங் & பாதுகாப்பு அம்சங்கள்: பிரேக் பாகங்களும் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கில் சிறப்பானதாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் 270மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற ராயல் என்ஃபீல்டு 650சிசிசி பைக்குகளில் பின் டிஸ்க் 240மிமீ-இல் வழங்கப்படுகிறது. பியர் 650 பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்தை தேவையென்றால் ஆஃப் செய்துவிடலாம்.

டெக்னாலஜி & இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்: ராயல் என்ஃபீல்டு குரில்லா மற்றும் ஹிமாலயன் பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று பியர் 650 பைக்கிலும் வட்ட வடிவில் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மாடர்ன் டிஸ்பிளே கூகுள் மேப்ஸ் நேவிகேஷனை புதிய ஸ்விட்ச்கியர் வாயிலாக ஏறக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புது, புது 650சிசி பைக்குகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஏனெனில், வெளிநாடுகளில் 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு தான் அதிக கஸ்டமர்கள் கிடைத்து வருகின்றனர். வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப நிறைய தரமான அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









