ராயல் என்பீல்டின் எந்த பைக் மாடல் அதிகம் இந்தியாவில் விற்பனையாகுது தெரியுமா? தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!
இளைஞர்களை மட்டுமல்ல இந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் இளம்பெண்கள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை என பலதரப்பட்டோரை தன் பக்கம் வளைத்து போட்டிருக்கின்றது. அதாவது, அவர்களின் மனம் கவர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக ராயல் என்பீல்டு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று இந்தியாவில் எப்போதும் தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அதிக கவர்ச்சியான தோற்றத்தையும், அட்டகாசமான ஸ்டைலையும் அதன் தயாரிப்புகள் கொண்டிருப்பதே இதற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணமாகும். இதை ஓட்டிச் செல்லும்போது மிகவும் துடிப்பான அனுபவம் கிடைக்கும். குறிப்பாக, அதன் புகை வெளியேற்றும் குழாயில் இருந்து வரும் ஒலி மிகவும் ரம்மியனாதாக இருக்கும். இதற்கு பலர் அடிமையாகவே இருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழல் இருப்பதனாலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையிலும் ஒவ்வொரு மாதமும் ஓர் சிறப்பான எண்ணிக்கையைப் பெற்றுவிடுகின்றன. உதாரணமாக 2024 பிப்ரவரி மாதம் அமைந்திருக்கின்றது. இந்த மாதத்தில் அந்நிறுவனம் 5.41 சதவீதம் விற்பனை வளர்ச்சியை ராயல் என்பீல்டு பெற்றிருக்கின்றது.
67,922 யூனிட்டுகள் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை சேர்க்காமல் இந்தியாவில் மட்டும் விற்பனையாகிய எண்ணிக்கையே இதுவாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததை சேர்த்தால் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 75,935 யூனிட்டுகளைத் தொடுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என இந்த மாபெரும் விற்பனை எண்ணிக்கை பலரை வாயை பிளக்கச் செய்திருக்கின்றது.
குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 (Classic 350) மாடல் 2024 பிப்ரவரியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இந்த ஒரு மாடல் மட்டும் தனியாளாக 28,310 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 41.68 சதவீதம் ஆகும்.
இந்த பைக்கிற்கு போட்டியாக போட்டி நிறுவனங்கள் கவர்ச்சியான சலுகைகளுடன் பைக்குகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும், இந்த மாபெரும் விற்பனை எண்ணிக்கையை அது பெற்றிருக்கின்றது. இந்தியாவில் கிளாசிக் 350 பைக் 1.93 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஓர் 350 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் 350 சிசி பைக்குகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த கிளாசிக் 350 பைக்கின் விற்பனை புள்ளி விபரம் அமைந்து இருக்கின்றது. தொடர்ச்சியாக நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்காகவும் இதுவே இருந்து வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
புல்லட் 350 (Bullet 350): ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் புல்லட் 350 இருக்கின்றது. ஆமாங்க, நிறுவனத்தின் இரண்டாவது மிக சிறப்பாக விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல் புல்லட் 350-யே ஆகும். இந்தியர்களின் மனம் கவர்ந்த விண்டேஜ் லுக் கொண்ட ராயல் என்பீல்டு தயாரிப்பாகவும் இது காட்சியளிக்கின்றது.
இந்த மாடல் மட்டும் 2024 பிப்ரவரி மாதத்தில் சுமார் 13,944 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.73 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைச் செய்யப்படுகின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஹண்டர் 350 (Hunter 350): நிறுவனத்தின் லேசான விற்பனைச் சரிவைச் சந்தித்த பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. 2023 பிப்ரவரியில் 12,925 யூனிட்டுகள் ஹண்டர் 350 விற்பனையாகிய நிலையில், 2024 பிப்ரவரியில் 6.21 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. 12,122 யூனிட்டுகள் மட்டுமே போன மாதத்தில் இந்த பைக் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. இருப்பினும், அது மூன்றாவது இடத்தைத் தக்க வைத்து இருக்கின்றது.
நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலாக ஹண்டர் 350 காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம் மட்டுமே ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. அலாய் வீல், ட்யூப் லெஸ் டயர், அனலாக் ஸ்விட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் பல சிறப்புகளை இந்த பைக் தாங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மீட்டியோர் 350 (Meteor 350): இந்த பைக் மாடல் 2023 பிப்ரவரியைக் காட்டிலும் 2024 பிப்ரவரியில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்த்திருக்கின்றது. 21.30 சதவீத விற்பனை வளர்ச்சியையே அது சந்தித்து இருக்கின்றது. 6,698 யூனிட்டுகள் மட்டுமே 2023 பிப்ரவரியில் விற்பனையாகிய நிலையில் 2024 பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 8,125 யூனிட்டாக உயர்ந்திருக்கின்றது.
ஹிமாலயன் (Himalayan): மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்த ராயல் என்பீல்டு தயாரிப்பாக இது இருக்கின்றது. இருப்பினும் இந்த பைக் மாடல் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பது மிகப் பெரிய அதிசயம் ஆகும். அது 19.82 சதவீத விற்பனை வீழ்ச்சியையேச் சந்தித்து இருக்கின்றது. வெறும் 2,278 யூனிட்டுகள் மட்டுமே இந்த அட்வென்சர் வகை பைக் இந்தியாவில் விற்பனையாகி இருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் 650 ட்வின் பைக் மாடல்களான கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) மற்றும் இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் ஏழாவது இடத்தை சூப்பர் மீட்டியோர் (Super Meteor 650) பிடித்திருக்கின்றன. 650 ட்வின் பைக்குகள் இரண்டும் சேர்ந்து 2070 யூனிட்டுகளும், சூப்பர் மீட்டியோர் 1073 யூனிட்டுகளும் 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனித்துவமான வரவேற்பு எப்போதும் நிலவிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த விற்பனை புள்ளி விபரங்கள் இருக்கின்றன. நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் விதமாக போட்டியாளர்கள் விலை குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருப்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








