ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் விலை இவ்ளோதானா! தீபாவளிக்கு துணிமணி எடுக்கற மாதிரி ஆளாளுக்கு வாங்க போறாங்க!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நிகராக எலெக்ட்ரிக் பைக்குகள் இங்கு இன்னும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. எனவே ஏத்தர் (Ather), பஜாஜ் (Bajaj) மற்றும் டிவிஎஸ் (TVS) போன்ற முன்னணி நிறுவனங்கள் பலவும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டுள்ளன. அதற்காக இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளே விற்பனையில் இல்லை என்ற சூழல் இல்லை. ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் எதுவும் இன்னும் பொதுமக்களுக்கு நன்றாக பரிட்சயம் ஆகவில்லை.
ஆனால் இந்த நிலைமை கூடிய விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் பைக்குகளை களத்தில் இறக்க தயாராகி வருகின்றன. ஓலா (Ola) மற்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இதில், ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. மறுபக்கம் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஐசி இன்ஜின் பைக்குகள் விற்பனையில், தனக்கென மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கொண்டுள்ளது.
எனவே அதன் எலெக்ட்ரிக் பைக் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இதற்கெல்லாம் வரும் நவம்பர் 4ம் தேதி (November 4) நமக்கு பதில் கிடைத்து விடும். ஏனெனில் அன்றைய தினம்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எக்மா (EICMA) அல்லது மிலன் மோட்டார்சைக்கிள் ஷோ (Milan Motorcycle Show) என அழைக்கப்படும் வாகன திருவிழாவில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு பிறகு விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்படும்.
வரும் நவம்பர் 4ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டாலும் கூட, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட சிறிது காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கின் சோதனை ஓட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Electrik01 Concept-ஐ தழுவிதான், இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் வடிவமைக்கப்படவுள்ளது.
இது அதிநவீன எலெக்ட்ரிக் பைக்காக இருந்தாலும் கூட, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் தோற்றத்தை கொண்டிருக்கும். இதன்படி வட்ட வடிவ ரெட்ரோ ஹெட்லேம்ப், க்ரோம் உடன் கூடிய வட்ட வடிவ சைடு வியூ மிரர்கள், வட்ட வடிவ டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் வட்ட வடிவ டெயில்லேம்ப்கள் ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆனால் தற்போது விற்பனையில் உள்ள எந்தவொரு ராயல் என்பீல்டு ஐசி இன்ஜின் பைக்கிலும் இல்லாத புத்தம் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான், எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் பைக்குகளின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரானது, பேட்டரி சதவீதம் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் காட்ட வேண்டும்.
எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100-150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக்கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே தினசரி பயன்பாடுகளுக்கும், வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்படும் குறுகிய தூர பயணங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கும். இந்திய சந்தையில் சுமார் 2.50-3 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் களமிறக்கப்பட்டால், நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு அதன் சைலென்சர் சத்தமும் ஒரு மிக முக்கியமான காரணம். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கில் சத்தமே வராது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கை ஓட்டுவது என்பது மிகவும் புதுமையான ஒரு அனுபவமாக இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications








