இந்த பெயருக்காகவே பைக் சேல்ஸ் ஆகுமே! ராயல் என்ஃபீல்டு இவியின் பெயர் இது தானா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று இரவு 9:30 மணிக்கு தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போது இந்த பைக் குறித்த பல்வேறு விபரங்களை மக்கள் தேடி வருகிறார்கள். இதுவரை இந்த பைக் குறித்த தகவல்கள் மற்றும் இந்த பைக்கின் பெயர் என்னவாக இருக்கும் இதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று நவம்பர் 4ம் தேதி புதிய பைக்கை களம் இறக்கப் போவதாக தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தகவல் வெளியிட்டு இருந்தது. இது மட்டுமல்லாமல் இந்த அறிமுகம் குறித்த டீசரும் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் தான் அறிமுகப்படுத்தப் போகிறது என்பதை குறிக்கும் விதமாக ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தி அதில் தான் எலெக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது டீசர் வெளியான நிலையில் இந்த டீசரில் ஒரு பாராஷூட் மூலம் பைக் ஒன்று பூமியில் வந்து இறங்குவதாக டீசர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த டீசருக்கு பின்னால் இந்த வாகனத்தின் பெயர் மற்றும் இதன் வரலாறு குறித்த சில தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக பேசப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறைந்த எடை கொண்ட வாகனம் ஒன்றை தயாரித்து போருக்காக அனுப்பி வைத்தது. இந்த வாகனத்திற்கு ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) என்று பெயர். இந்த வாகனத்தை நினைவு கூறும் விதமாக தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை குறிக்கும் விதமாக தான் இந்த வாகனம் பாராசூட்டில் வந்து இறங்குவது போல உருவாக்கப்பட்டு டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது இப்படியாகத்தான் இந்த வாகனம் பாராசூட் மூலம் ராணுவத்தினருக்கு ஒவ்வொரு இடத்திலும் கொண்டு சேர்க்கப்பட்டது. இதையடுத்து இதே போன்ற ஒரு வாகனத்தை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த முயற்சியை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் 1950களில் இந்த வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. அப்பொழுது இது 126 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட வாகனமாக இருந்தது.
இந்த வாகனத்தை பயன்படுத்தி ஒருவர் 200 முதல் 240 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் சூழ்நிலை இருந்தது. இந்த வாகனம் வெறும் 56 கிலோ எடை தான் இருந்தது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகவும் ஸ்ப்ளெண்டர் பைக் கூட இந்த வாகனத்தின் எடையை விட டபுள் மடங்கு எடை. அப்படி என்றால் இந்த வாகனம் எவ்வளவு குறைவான எடையில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

இது மட்டுமல்லாமல் கடந்த 2020ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஃபிளேயிங் ஃபிளே என்ற பெயரை டிரேட் மார்க் செய்து வாங்கிவிட்டது. இதனால் இந்த பெயரில் தான் இன்று களமிறங்கப் போகும் பைக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கை பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இன்றைய அறிமுகம் பலருக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாகனத்தின் வடிவமைப்பை பொறுத்தவரை ரெட்ரோ ஸ்டைல் பாபர் லுக்கில் சிங்கிள் சீட் கொண்ட வாகனமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தை அந்நிறுவனம் வெறும் சோதனை முயற்சியாக மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது வெற்றி பெறும் பட்சத்தில் அதிக மக்கள் விரும்பும் வகையிலான வடிவமைப்பிலான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு எலெக்ட்ரிக் மெஷினில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி உள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்து தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை இன்று அறிமுகப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிகமாக விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கலாம். இதன் வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









