பெட்ரோல் பைக்கை எல்லாம் ஓரங்கட்ட வேண்டியதுதான்!! ராயல் என்ஃபீல்டில் இதுக்குதான் காத்துக்கிட்டு இருந்தோம்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), பைக்குகள் வடிவமைப்பில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய நிறுவனம். இதன் காரணமாகவே, ராயல் என்ஃபீல்டில் இருந்து அவ்வப்போது புது, புது பைக்குகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எலக்ட்ரிக் பைக் வணிகத்தில் இறங்கவுள்ளது. இதன்படி, இந்த நிறுவனத்தில் இருந்து முதற்கட்டமாக வெளிவரவுள்ள 2 எலக்ட்ரிக் பைக்குகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பைக்கை பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், எப்போது பைக் அறிமுகமாகலாம்? என்ன மாதிரியான பைக் இது? என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இந்த வாரம் 'புதிய வாகனங்கள் அறிமுக வாரம்'-ஆ என்பது தெரியவில்லை. ஏனெனில், தொடர்ச்சியாக புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம் குறித்த தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. சமீபத்தில், மஹிந்திரா அதன் புதிய எக்ஸ்.இ.வி 9இ மற்றும் பிஇ 6இ எலக்ட்ரிக் கார்களை பற்றிய விபரங்களை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து தற்போது ராயல் என்ஃபீல்டு அதன் முதல் எலக்ட்ரிக் பைக்குகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கும், எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் ஏழாம் பொருத்தம் என சொல்லலாம். ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் அடையாளமே அவற்றின் 'டுப்... டுப்' சத்தம் தான். ஆனால், எலக்ட்ரிக் பைக்குகள் முற்றிலுமாக சைலண்டாக இயங்கக்கூடியவை.
இதனால், மற்ற நிறுவனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் பைக்குகளின் தாக்கத்தை ராயல் என்ஃபீல்டு எவ்வாறு எதிர்கொள்ள உள்ளது என்பதை அறியவே ஆவலாக உள்ளோம். இந்த ஆவலுக்கு மத்தியில்தான் ராயல் என்ஃபீல்டு அதன் புதிய 2 எலக்ட்ரிக் பைக்குகள் குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே சி6 மற்றும் எஸ்6 என்பன அந்த இரு எலக்ட்ரிக் பைக்குகள் ஆகும். இவை இரண்டும் தோற்றத்தில் ஒன்றுக்கு ஒன்று மாறுப்பட்டவைகளாக உள்ளன.

இதில், ஃபிளையிங் ஃபிளே சி6 பைக்கை பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். இந்த தொகுப்பில், ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே எஸ்6 பைக்கை பற்றி பார்க்க போகிறோம். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பைக்குகளை 'ஃபிளையிங் ஃபிளே' (Flying Flea) என்கிற பிராண்டின் கீழ் விற்பனை செய்ய உள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றாலே எடைமிக்கவையாக இருக்கும் என்கிற நிலையை மாற்றி, இந்த எலக்ட்ரிக் பைக்குகளை குறைந்த எடையில் உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகவே ஃபிளையிங் ஃபிளே பிராண்டிற்கு பாராசூட்டில் இருந்து பைக் டெலிவிரி செய்யப்படுவது போன்ற லோகோவை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொடுத்துள்ளது. புதிய ஃபிளையிங் ஃபிளே எஸ்6 பைக்கை பொறுத்தவரையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை போன்று அட்வென்ச்சர் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது, அதற்கேற்ப முன்பக்க சஸ்பென்ஷன் டிராவல் நன்கு நீளமானதாகவும், மட்கார்ட் சக்கரத்தில் இருந்து நன்கு உயரமாகவும் வழங்கப்பட்டுள்ளன. இருக்கை செட்-அப் ஒரே சம தளமாக சிங்கிள்-பீஸில் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும், போலியான என்ஜின் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வெளியில் இருந்து பார்த்தால் என்ஜின் சிஸ்டம் போன்று உள்ளது. ஆனால், உள்ளே எலக்ட்ரிக் மோட்டார் இடம்பெற்றுள்ளது.
மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை. இவற்றை அறிய 2025 அக்டோபர் வரையில் காத்திருக்க வேண்டும். ஏனெனில், புதிய ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே எஸ்6 பைக்கின் அறிமுகம் அடுத்த ஆண்டு அக்டோபரில் தான் எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பைக்கின் விலை ஏறக்குறைய ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தை பொறுத்தவரையில், ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் எஸ்6 ஆனது ஓர் எலக்ட்ரிக் ஸ்க்ராம்ப்ளர் பைக் ஆகும். இவ்வாறான தோற்றம் கொண்ட பைக்குகள் இந்தியாவில் ஏகப்பட்டவை விற்பனையில் உள்ளன. இருப்பினும், எலக்ட்ரிக்கில் இவ்வாறான தோற்றம் கொண்ட பைக்... அதுவும் ராயல் என்ஃபீல்டில் இருந்து இவ்வாறான ஒரு எலக்ட்ரிக் பைக் எந்த அளவிற்கு மக்களை கவர்ந்திழுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









